பொது ஜூன் 03,2022 | 14:49 IST
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சுப்பிரமணியபுரம் 10 வது வீதியை சேர்ந்தவர் ஐயப்பன். இவர் நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் வேலை பார்க்கிறார். சிகிச்சைக்காக குடும்பத்துடன் கடந்த மே 4ம் தேதி சென்னை சென்றார். பக்கத்து வீட்டில் வசிப்போரிடம் தனது வீட்டை பார்த்து வரும்படி ஐயப்பன் கேட்டுக் கொண்டார். அவர்கள் சென்று பார்த்த போது, கதவுகள், சிசிடிவி கேமராக்கள் உடைக்கப்பட்டிருந்தது. இது குறித்து ஐயப்பனிடம் கூறினர். சென்னையில் இருந்த ஐயப்பன் காரைக்குடி வந்தார். வீட்டில் வைத்திருந்த 65 பவுன் நகை, வைர நகைகள், வெள்ளி பொருட்கள், 1 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் கொள்ளை போனது தெரிந்தது. வீட்டின் முன்பு இருந்த சிசிடிவி கேமரா ஒன்று கொள்ளையர்கள் கண்ணில் படவில்லை. அதில் பதிவாகியிருந்த காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். டவுசர், பனியன் அணிந்த கொள்ளையன், காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து வீட்டிற்குள் யாரும் இருக்கிறார்களா, என நோட்டம் பார்க்கிறான். அவனை தொடர்ந்து டவுசர், பனியன் அணிந்த மேலும் 4 பேர் நுழைந்து, கதவை கடப்பாறையால் உடைக்கும் காட்சி பதிவாகி இருந்தது. கொள்ளையர்கள் வட மாநிலத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
வாசகர் கருத்து