மாவட்ட செய்திகள் ஜூலை 22,2022 | 00:00 IST
ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அலகு குத்தி, தீச்சட்டி ஏந்தி கோயிலை வலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அம்மனிடம் வேண்டி குழந்தை பெற்ற தம்பதிகள், கரும்பு தொட்டிலில் குழந்தையை சுமந்து வந்து வேண்டுதலை நிறைவேற்றினர். முடி காணிக்கை செலுத்தி, நெய்தீபம் ஏற்றிய பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்கின்றனர். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் முத்துமாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு மஞ்சள் அம்மியில் அரைத்து அபிஷேகம் செய்வது வழக்கம். கோவிட் காரணமாக 2 ஆண்டுகள் நடைபெறாமல் இருந்த விழா நேற்று கோலாகலமாக துவங்கியது. விரதம் இருந்த பெண் பக்தர்கள் கோயில் வளாகத்தில் 51 அம்மியில் 500 கிலோ மஞ்சள் அரைத்து அம்மனை வழிபட்டனர். மதுரை திருப்பரங்குன்றம் மேலபச்சேரி தெருவில் ஸ்ரீகோட்டை வாராகி அம்மன் வழிபாட்டு மன்றம் உள்ளது. இங்கு ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு எலுமிச்சை மாலை, முத்து மாலை அணிவித்து சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
வாசகர் கருத்து