Advertisement

ஸ்டாலின் மீது இந்துக்கள் வெறுப்பு

மாவட்ட செய்திகள் ஆகஸ்ட் 04,2022 | 17:55 IST

Share

கோவை மாநகராட்சி கோல்டுவின்ஸ் 7 வது வார்டு துரைசாமி நகரில் சுயம்பு தம்புரான் கோயில் பிரசித்தி பெற்றது. இக்கோயில் 200 ஆண்டு பழமையானது. இந்நிலையில் மாநகராட்சி ரோட்டில் கோயில் இருப்பதாக கூறி கோயிலை இடிக்க ஊழியர்கள் பொக்லைன் இயந்திரத்துடன் வந்தனர். பாதுகாப்பு கருதி அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். கோயில் இடிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்துக்கள் மற்றும் பக்தர்கள் அங்கு திரண்டனர். கோயில் அருகே எண்ணற்ற ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் உள்ளன. அதை விட்டு விட்டு கோயிலை இடிக்கும் பணியில் அதிகாரிகள் வேகம் காட்டினர். கோயில் அருகில் உள்ள தனியார் சொகுசு விடுதிக்கு ஆதரவாக மாநகராட்சி அதிகாரிகள் செயல்படுவதாக பக்தர்கள் குற்றம் சுமத்தினர். எதையும் கண்டு கொள்ளாத அதிகாரிகள் பக்தர்களின் கடும் எதிர்ப்பை மீறி கோயிலின் சுற்றுச்சுவரை பொக்லைன் கொண்டு இடித்தனர். இதைப் பார்த்து பெண் பக்தர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். உயிரே போனாலும் கோயிலை இடிக்க விட மாட்டோம் என அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். எனினும் கோயிலின் சுற்றுச்சுவர் முற்றிலும் இடித்து அகற்றப்பட்டது. கோயிலில் இருந்து அகற்றப்படும் சிலைகளுக்கு தகுந்த பூஜைகள் செய்து அருகில் உள்ள கோயில்களில் வைக்க வேண்டும். அக்கோயிலில் இடம் இருந்தால் இந்த சிலைகளுக்கு தனி சன்னதியை ஏற்படுத்தலாம். தகுந்த இடம் இல்லாத பட்சத்தில் உற்சவராகவோ அல்லது கோயில் பிரகாரத்தில் பரிகார சுவாமியாகவோ வைத்து பூஜைகள் செய்ய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். இதுபோன்ற திட்டமிடல் அதிகாரிகளிடம் இல்லை. எடுத்தேன்; கவிழ்த்தேன் என்ற பாணியில் கோயில் மீது கை வைத்தது இந்துக்களிடையே அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த திமுக அரசு இந்துக்களின் உணர்வுகளுக்கு உண்மையாக மதிப்பளித்திருந்தால் அல்லது இந்து மதத்தை மதித்திருந்தால் கோயிலை இடிக்கும் முன்பு இந்து மத விதிகளை பின்பற்றியிருக்க வேண்டும். இதுபோன்று எதையும் செய்யாமல் இந்து கோயில்களை குறி வைத்து திமுக அரசு தொடர்ந்து இடித்து அகற்றி வருவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக இந்துக்கள் குற்றம் சுமத்தினர். கோயில் இடிப்பு சம்பவம் கோவையில் இந்துக்களிடையே கொந்தளிப்பையும், ஸ்டாலின் அரசு மீது வெறுப்பையும் ஏற்படுத்தி வருகிறது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X