பொது செப்டம்பர் 04,2022 | 17:32 IST
திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்தவர் தங்கராஜ், காய்கறி வியாபாரி. ஊட்டியில் இருந்து மொத்தமாக காய்கறிகளை கொள்முதல் செய்து, உள்ளூர் கடைகளுக்கு சப்ளை செய்கிறார். மொத்த வியாபாரிகளுக்கு வாரம் ஒருமுறை பணம் கொடுப்பார். ஞாயிறு அதிகாலை 52 லட்சம் ரூபாயுடன் ஊட்டி பஸ் ஸ்டாண்ட் வந்தார். உடன் மகன் யுவராஜ் இருந்தார். காய்கறி மார்க்கெட்டுக்கு நடந்து சென்றபோது, பின்னால் வந்த 3 மர்ம ஆசாமிகள், தந்தை, மகனை அரிவாளால் வெட்டிவிட்டு, பணப் பையை பிடுங்கிக் கொண்டு காரில் தப்பிவிட்டனர். அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். படுகாயமடைந்த தங்கராஜ், யுவராஜை மருத்துவமனையில் அட்மிட் செய்தனர். காரின் நம்பர், கலரை வைத்து, கொள்ளையரை பிடிக்க ஊட்டி முழுவதும் முக்கிய சாலைகளில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். குன்னுரை அடுத்துள்ள காட்டேரி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, கொள்ளைக்கு பயன்படுத்திய கார் வந்தது. அதில் இருந்த 3 கொள்ளையரை போலீசார் கைது செய்தனர். பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த துணிகர கொள்ளையில் மொத்த வியாபாரி யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? என போலீசார் விசாரிக்கின்றனர். கொள்ளை நடந்த இரண்டரை மணிநேரத்தில் கொள்ளையரை பிடித்த ஊட்டி போலீசாரை உயரதிகாரிகள் பாராட்டினர்.
வாசகர் கருத்து