மாவட்ட செய்திகள் செப்டம்பர் 08,2022 | 00:00 IST
திருச்சி மணப்பாறை அருகே அழிஞ்சி மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் கிருபாகரன், வயது 31. இவரும் அழககவுண்டம்பட்டியைச் சேர்ந்த 24 வயது சிவரஞ்சனி பனியன் கம்பெனியில் வேலை பார்த்தபோது ஓராண்டாக காதலித்தனர். இந்நிலையில் கிருபாகரன் சிங்கப்பூரில் வேலை கிடைத்ததால் சென்று விட்டார். எனினும் இருவரும் காதலித்து வந்தனர். இதையறிந்த சிவரஞ்சனியின் பெற்றோர் அவருக்கு மாப்பிள்ளை பார்த்தனர். இதுகுறித்து சிவரஞ்சனி காதலன் கிருபாகரனிடம் கூறினார். இதையடுத்து சிவரஞ்சனியை திருமணம் செய்து கொள்வதற்காக கடந்த 5 ம் தேதி கிருபாகரன் சிங்கப்பூரில் இருந்து சொந்த ஊருக்கு வந்தார். கடந்த 6 ம் தேதி திண்டுக்கல் வீரநாயக்கன்பட்டியில் உள்ள விநாயகர் கோயிலில் சிவரஞ்சனியை கிருபாகரன் தனது பெற்றோர் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார். மனைவியுடன் தனது பெற்றோர் வீட்டில் இருந்தார். இதையறிந்த சிவரஞ்சனியின் உறவினர்கள் 15 க்கும் மேற்பட்டோர் கிருபாகரன் வீ்ட்டிற்கு வந்தனர். கிருபாகரன், அவரது பெற்றோரை தாக்கி விட்டு சிவரஞ்சனியை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி கடத்தி சென்றனர். மனைவியை மீட்டுத் தரும்படி போலீசில் கிருபாகரன் புகார் கூறினார். சிவரஞ்சனியை மீட்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மணமகளை கடத்திய சம்பவம் மணப்பாறையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
வாசகர் கருத்து