பொது செப்டம்பர் 09,2022 | 10:30 IST
திருச்சியில் காவிரி ஆற்றின் குறுக்கே, 1976ல், 540 மீட்டர் நீளத்தில் பாலம் அமைக்கப்பட்டது. தினமும் லட்சக்கணக்கான வாகனங்கள் செல்வதால் பாலம் வலுவிழந்து, பல இடங்களில் சாலை பெயர்ந்து, சிதிலமடைந்துள்ளது. அதனால், 2020ம் ஆண்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும், மீண்டும் பாலத்தில் விரிசல்கள் ஏற்பட்டு, பல இடங்களில் ஓட்டைகள் உண்டாயின. இதனால், வாகன போக்குவரத்தில் சிரமம் ஏற்பட்டது. தற்போது, அந்தப் பாலம் 6.87 கோடி ரூபாயில் சீரமைக்கப்பட உள்ளது. அதனால், நாளை இரவு 12:00 மணி முதல், இந்த பாலத்தில் போக்குவரத்து தடை செய்யப்படுகிறது. 5 மாதங்களுக்கு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதால், வாகனங்களுக்கு மாற்று வழித்தடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்சியில் இருந்து சென்னை செல்லும் வாகனங்கள், புறவழிச் சாலையில் சஞ்சீவி நகர் மார்க்கமாக, காவிரி புதுப்பாலம், நம்பர் 1 டோல்கேட் வழியாக செல்ல வேண்டும். சென்னையில் இருந்து வரும் வாகனங்கள் நம்பர் 1 டோல்கேட், காவிரி புதுப்பாலம் வழியாக புறவழிச்சாலை மார்க்கத்தில் திருச்சிக்குள் வர வேண்டும். சத்திரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து செல்லும் துறையூர், பெரம்பலுார், கடலுார், சிதம்பரம் புறநகர் பஸ்கள், ரயில்வே பாலம் ஓயாமரி வழியாக, காவிரி பழைய பாலத்தில் நம்பர் 1 டோல்கேட் மார்க்கத்தில் செல்ல வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து