பொது செப்டம்பர் 09,2022 | 11:57 IST
சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்தவர் சதீஷ்குமார் வயது 30. ராயபுரத்தில் உள்ள நகைக்கடையில் வேலை பார்க்கிறார். அதே கடையில் பணிபுரிந்த இளம்பெண்ணுக்கும், மணிகண்டன் என்பவருக்கும் தண்டையார்பேட்டை முருகன் கோவிலில் இன்று காலை திருமணம் நடத்த இரு வீட்டாரும் திரண்டிருந்தனர். திருமணத்துக்கு சதீஷும் வந்திருந்தார். தாலி கட்டும் நேரத்தில் சதீஷ் ஓடிப்போய் தாலியை தட்டி விட்டார். தாலியை அவசர அவசரமாக மணப்பெண்ணுக்கு கட்ட முயன்றார். மணமகன் அதிர்ச்சியடைந்தார். சுதாரித்த மணமகளின் குடும்பத்தார் சதீைஷ தாலி கட்ட விடாமல் தடுத்தனர். தர்ம அடி கொடுத்தனர். போலீசார் வந்து சதீஷிடம் விசாரித்தனர். நானும் மணப்பெண்ணும் ஒரே கடையில் வேலை பார்த்ததால் காதலித்தோம். திருமணத்தை நிறுத்திவிட்டு என்னை கூட்டிட்டுப் போ என அவள் கூறியதால் இப்படி செய்தேன் என சதீஷ் போலீசாரிடம் கூறினார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மணிகண்டன், நான் இந்தப் பெண்ணை திருமணம் செய்ய மாட்டேன் என கூறி விட்டு பைக்கில் கிளம்பி விட்டார். திருமணத்துக்கு நாங்கள் செய்த செலவை மணப்பெண் வீட்டாரிடம் வாங்கித்தர வேண்டும் என போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். மணிகண்டன், சதீஷ், மணப்பெண் மூவரது குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் தண்டையார்பேட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
வாசகர் கருத்து