பொது நவம்பர் 28,2022 | 13:23 IST
விழுப்புரம் மாவட்டம், ஆதனூர் அடுத்த ஆசாரங்குப்பத்தை சேர்ந்தவர் சங்கீதா. வயது 24. வழுதாவூரை சேர்ந்த முத்துக்குமரனுடன் 6 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. முத்துக்குமரனுக்கு மதுப்பழக்கம் இருந்ததால், கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. 4ம் தேதி நடந்த சண்டையில் சங்கீதா மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டதாக விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 22 நாட்களுக்கு பின் 26ம் தேதி சிகிச்சை பலனின்றி இறந்தார். சங்கீதா இறப்பதற்கு முன் அளித்த மரண வாக்குமூலம் வெளியானது. அதில், வரதட்சணை கேட்டு கணவரே மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்ததாகவும், வெளியில் சொன்னால் குழந்தைகளுக்கும் தீ வைப்பேன் என மிரட்டியதாகவும் கூறி உள்ளார். சங்கீதாவின் தந்தை சக்திவேல் கொடுத்த புகாரின் அடிப்படையில் கண்டமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து