விளையாட்டு ஜனவரி 06,2023 | 19:50 IST
புனேயில் நடந்த இரண்டாவது 'டி-20' போட்டியில் இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் சொதப்பினர். அர்ஷ்தீப் சிங் ஐந்து 'நோ-பால்' வீசியது, தோல்விக்கு காரணமாக அமைந்தது. இப்படி 'நோ-பால்' வீசுவது குற்றமே என கேப்டன் ஹர்திக் பாண்ட்யா வெளிப்படையாக விமர்சித்தார். இந்தியா வந்துள்ள இலங்கை அணி மூன்று 'டி-20' போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி புனேயில் நடந்தது. முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணிக்கு நமது பவுலர்கள் நெருக்கடி தர தவறினர். இதனால், 'பவர் பிளேயில்' மட்டும் இலங்கை விக்கெட் இழப்பின்றி 55 ரன்கள் சேர்த்தது. தனது முதல் ஓவரை வீசிய வேகப்பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங் சொதப்பினார். தொடர்ச்சியாக மூன்று 'நோ பால்' வீசினார். இதன் மூலம், சர்வதேச 'டி-20' அரங்கில் 'ஹாட்ரிக் நோ பால்' வீசிய முதல் இந்திய பவுலர் என்ற மோசமான சாதனை படைத்தார். ஒட்டுமொத்தமாக, 'டி-20' வரலாற்றில் அதிக முறை 'நோ பால்' வீசியவர்கள் பட்டியலிலும் முதலிடம் பிடித்தார். இதுவரை 12 முறை இவ்வாறு வீசி உள்ளார். புனே போட்டியில் அர்ஷ்தீப் சிங், சிவம் மாவி, உம்ரான் மாலிக் என மூன்று இந்திய பவுலர்கள் சேர்ந்து மொத்தம் 7 'நோ பால்' வீசினர். இதில் 'பிரி ஹீட்', உதிரி உட்பட 36 ரன்கள் இலங்கை அணிக்கு கிடைத்தது. இது, இந்திய அணியின் தோல்விக்கும் காரணமாக அமைந்துவிட்டது. இது குறித்து இந்திய அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா கூறுகையில்,'' கிரிக்கெட்டின் அடிப்படை விஷயங்களில் தவறு செய்தோம். எப்படிப்பட்ட போட்டி என்றாலும் 'நோ பால்' வீசுவது குற்றமே. அர்ஷ்தீப் சிங் மீது பழி சுமத்த விரும்பவில்லை. அவர் தவறுகளில் இருந்து பாடம் படிக்க வேண்டும். சர்வதேச அளவிலான போட்டியில் இத்தகைய தவறுகள் நேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்,'' என்றார்.
வாசகர் கருத்து