விளையாட்டு ஜனவரி 26,2023 | 18:20 IST
இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் 'டி-20' போட்டி நாளை ராஞ்சியில் நடக்கிறது. இதில் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணி தொடரை கைப்பற்ற காத்திருக்கிறது. இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி மூன்று போட்டி கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி நாளை (ஜன. 27) ராஞ்சியில் நடக்கிறது. ஒருநாள் தொடரை கைப்பற்றிய அணியில் இடம் பெற்ற கேப்டன் ரோகித், கோஹ்லி இல்லாத நிலையில், 'டி-20' அணி மீண்டும் ஹர்திக் பாண்ட்யா தலைமையில் களமிறங்குகிறது. இவரது அணி, சமீபத்தில் இலங்கைக்கு எதிரான 'டி-20' தொடரை 2-1 என கைப்பற்றியது. இதுபோல மீண்டும் கோப்பை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணிக்கு இளம் வீரர்கள் சுப்மன் கில், இஷான் கிஷான் ஜோடி துவக்கம் தர காத்திருக்கிறது. சுப்மனை பொறுத்தவரை, கடைசியாக களமிறங்கிய நான்கு இன்னிங்சில் இரண்டு சதம் விளாசி உள்ளார். உள்ளூர் போட்டிகளில் மும்பை அணிக்காக துவக்கத்தில் ரன் மழை பொழிந்த பிரித்வி ஷா, 2021 ஜூலைக்குப் பின் மறுபடியும் இந்திய அணியில் இணைந்துள்ளார். 'மிடில் ஆர்டரில்' துணைக்கேப்டன் சூர்யகுமார் வருகிறார். பின் வரிசையில் ஹர்திக் பாண்ட்யா, தீபக் ஹூடா நம்பிக்கை தரவுள்ளனர். பந்துவீச்சில் ஷமி, சிராஜ் என 'சீனியர்' வீரர்கள் இல்லை. உம்ரான் மாலிக்குடன், ஷிவம் மாவி பலம் சேர்க்கிறார். காயத்தில் இருந்து மீண்ட அர்ஷ்தீப் சிங், பந்துவீச்சிலும் மீண்டு வந்தால் நல்லது. சுழலில் குல்தீப் அல்லது சகால் என யாராவது ஒருவருக்குத் தான் இடம் கிடைக்கும். 'ஆல் ரவுண்டர்' இடத்தில் வாஷிங்டன் சுந்தரும் போட்டியில் உள்ளார். நியூசிலாந்து 'டி-20' அணிக்கு சுழற்பந்துவீச்சாளர் சான்ட்னர் கேப்டனாக களமிறங்குகிறார். ஒருநாள் தொடரில் பேட்டிங்கில் ஜொலித்த கான்வே, பிரேஸ்வெல் கைகொடுக்க காத்திருக்கின்றனர். ஆலென், சாப்மன், 'ஆல் ரவுண்டர்' பெர்குசன், வேகத்தில் டிக்னெர், சுழலில் இஷ் சோதி உள்ளனர்.
வாசகர் கருத்து