விளையாட்டு பிப்ரவரி 24,2023 | 19:12 IST
வெலிங்டன் டெஸ்டில் அசத்திய இங்கிலாந்தின் புரூக், டெஸ்ட் அரங்கில் முதல் 9 இன்னிங்சில் அதிக ரன் சேர்த்த வீரர் என்ற சாதனை படைத்தார். நியூசிலாந்து சென்றுள்ள இங்கிலாந்து அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் வென்ற இங்கிலாந்து தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது. இரண்டாவது டெஸ்ட் வெலிங்டனில் துவங்கியது. 'டாஸ்' வென்ற நியூசிலாந்து பவுலிங் தேர்வு செய்தது. இங்கிலாந்து அணிக்கு பென் டக்கெட் 9 ரன்களில் வெளியேறி ஏமாற்றினார். போப் 10 ரன்கள் மட்டும் எடுத்தார். ஜோ ரூட், ஹாரி புரூக் ஜோடி சிறப்பாக விளையாடியது. இருவரும் சதம் கடந்தனர். புரூக் பவுண்டரி, சிக்சராக விளாசி வேகமாக ரன் சேர்த்தார். ஆட்ட நேர முடிவில், ரூட் 101 ரன்களில் அவுட்டாகாமல் இருந்தார். புரூக் 169 பந்துகளில் 24 பவுண்டரி, 5 சிக்சர் என 184 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். இதன் மூலம், டெஸ்ட் அரங்கில் முதல் 9 இன்னிங்சில் அதிக ரன் குவித்த வீரர் என்ற உலக சாதனை படைத்தார். இதுவரை 9 இன்னிங்சில் 4 சதம், 3 அரை சதம் என மொத்தம் 807 ரன் சேர்த்துள்ளார். இதற்கு முன், இந்திய முன்னாள் வீரர் வினோத் காம்ப்ளி முதல் 9 இன்னிங்சில் 798 ரன்கள் எடுத்ததே அதிகமாக இருந்தது. தவிர, வெலிங்டன் மைதானத்தில் ஒரே இன்னிங்சில் அதிக ரன் சேர்த்த இங்கிலாந்து வீரர் என்ற பெருமை பெற்றார். இதற்கு முன், 1984ல் இங்கு நடந்த டெஸ்டில் இங்கிலாந்தின் டேரிக் 164 ரன் எடுத்ததே அதிகம். 24 வயதான புரூக், கடந்த ஆண்டு தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ஓவல் டெஸ்டில் அறிமுகமானார். இதுவரை 6 டெஸ்ட் போட்டியில் மட்டும் விளையாடி உள்ள இவர், 4 சதம் அடித்துள்ளார். வெலிங்டன் டெஸ்டின், இரண்டாவது நாள் ஆட்டத்திலும் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தினால் டெஸ்டில் முதல் இரட்டை சதத்தை பதிவு செய்யலாம்.
வாசகர் கருத்து