மாவட்ட செய்திகள் மே 13,2023 | 13:29 IST
கடலூர் மாவட்டம் குமராட்சி சி.அரசூர், மா.அரசூர் கிராமத்தினர் நீண்ட காலமாக கொள்ளிடக்கரையை ரோடாக பயன்படுத்தினர். போக்குவரத்துக்கு வழியில்லாத இரு கிராமத்திற்கு அரசு ரோடு அமைத்து தர வேண்டும் என நீண்ட நாட்களாக பல்வேறு போராட்டங்கள் நடத்தினர். அரசிடம் இருந்து எந்த பதிலும் இல்லை, இனி அரசை நம்பி பயனில்லை என இரு கிராமத்தினரும் முடிவெடுத்தனர். கிராமத்திற்கு தாங்களாகவே ரோடு போட எண்ணி இரண்டு கிராமத்தினரும் சேர்ந்து 3 லட்ச ரூபாய் திரட்டினர். பாசன வாய்க்காலின் கரையை அளந்து சி.அரசூர் மற்றும் மா.அரசூர் கிராமத்திற்கு 2.5 கிலோமீட்டர் தூரத்திற்கு ஜேசிபி இயந்திரம் மூலம் ரோடு போடும் பணி விறுவிறுப்பாக நடக்கிறது. கிராம இளைஞர்கள் பொதுமக்கள் தாங்களாக முன்வந்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தன்னார்வலர்கள் முன்வந்து உதவி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை கிராம மக்கள் வைத்துள்ளனர். கிராமத்தினரின் முயற்சிக்கு பலரும் பாராட்டையும் வாழ்த்தையும் தெரிவித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து