மாவட்ட செய்திகள் மே 27,2023 | 18:46 IST
களிமண்ணோ, காகிதமோ எது கிடைத்தாலும் கலைப்பொருட்களாக மாற்றி அசத்துகின்றனர் அரசுப்பள்ளி மாணவர்கள். இவர்களின் படைப்புகள் காண்போரின் புருவங்களை உயர்த்த செய்கின்றன. பள்ளிக்கல்வித்துறையும், மாவட்ட நிர்வாகமும் இணைந்து, அரசுப்பள்ளிகளில் படிக்கும் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, இலவச கோடைக்கால பயிற்சி முகாம், கோவை ஆர்.எஸ்.புரம், மாதிரி பள்ளியில் நடத்தியது. 10 நாட்கள் நடந்த பயிற்சியில், அரசுப்பள்ளி கலையாசிரியர்கள், தன்னார்வலர்கள் இணைந்து மாணவர்களுக்கு பல்வேறு பயிற்சிகளை அளித்தனர். இப்பயிற்சிக்கு பின் மாணவர்களின் படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன. வெறும் காகிதத்தில் உருவங்கள் செய்து மாணவர்கள் அசத்தினர். தலையாட்டி பொம்மையை அச்சு அசலாக, நேர்த்தியாக உருவாக்கியிருந்தனர். செய்தித்தாள்களால் உருவாக்கப்பட்ட கொலாஜ், பென்சில் டிராயிங், ஆயில் பெயிண்டிங், ஸ்கெச் டிராயிங், கண்களை கவர்ந்தது. வீணாகும் பொருட்களை கொண்டு கைவினை பொருட்கள் செய்தனர். களிமண் கொண்டு, கோவையின் அடையாளமான ஆதியோகி சிலை, புத்தர், விநாயகர் முதல் காந்தியடிகள் வரை தத்ரூபமாக சிலையாக வடித்திருந்தனர். மாணவர்களின் குட்டி கைகளுக்குள் எத்தனை எத்தனை வித்தைகள் என அதிசயிக்கும் வகையில், படைப்புகள் இடம்பெற்றன. விடுமுறையில் குடும்பத்துடன் நேரம் செலவிடாமல், அரசுப்பள்ளி மாணவர்களுக்காக , அவர்களுடன் அமர்ந்து, ஒவ்வொருவருக்குள்ளிருக்கும் திறமையை அறிந்து, அவர்கள் ஆர்டிஸ்ட்டாக பட்டை தீட்டிக்கொண்டிருந்தனர் ஆசிரியர்கள்.
வாசகர் கருத்து