சிறப்பு தொகுப்புகள் ஜூன் 04,2023 | 17:50 IST
தமிழகத்தில் உள்ள எல்லா போலீஸ் சப் டிவிஷனிலும் தலா ஒரு மகளிர் போலீஸ் ஸ்டேஷன் திறக்க அரசு முடிவு செய்தது. ஆனால் கருமத்தம்பட்டி சப் டிவிஷன் துவக்கப்பட்டு 8 ஆண்டாகியும் மகளிர் போலீஸ் ஸ்டேஷன் துவங்கவில்லை. சூலூர், கருமத்தம்பட்டி, கோவில்பாளையம், செட்டிபாளையம், சுல்தான்பேட்டையில் பாதிப்புக்கு உள்ளாகும் பெண்கள் 30 கிலோமீட்டர் தூரம் பயணித்து துடியலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்க வேண்டியிருந்தது. மக்களின் தொடர் கோரிக்கையை ஏற்று, கருமத்தம்பட்டியில் மகளிர் போலீஸ் ஸ்டேஷன் துவங்க சமீபத்தில் அரசு ஒப்புதல் வழங்கியது. பல ஆண்டாக கருமத்தம்பட்டியில் கேட்பாரற்று கிடந்த பிரிட்டிஷ் கால கட்டடம் ரூ.3 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டது. சீரமைக்கப்பட்ட கட்டடத்தில் கருமத்தம்பட்டி மகளிர் போலீஸ் ஸ்டேஷன் செயல்பட தொடங்கியது. 1934ல் கட்டப்பட்ட இந்த கட்டடத்தில் ஆங்கிலேயர் ஆட்சியிலும் போலீஸ் நிலையம்தான் செயல்பட்டது. இங்கு, 2013 வரை செயல்பட்ட சூலூர் போலீஸ் ஸ்டேஷன் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டது. அதன்பிறகு, 10 ஆண்டாக பராமரிப்பு இல்லாமல் இருந்த கட்டடம் மீண்டும் போலீஸ் ஸ்டேஷனாக மிடுக்கான தோற்றம் பூண்டுள்ளது. கருமத்தம்பட்டி மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு ஒரு பெண் இன்ஸ்பெக்டர், எட்டு பெண் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வாசகர் கருத்து