சிறப்பு தொகுப்புகள் ஜூன் 05,2023 | 12:40 IST
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கத்தரிப்புலம் கிராமத்தில் கள்ள நோட்டு புழக்கத்தில் இருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. போலீசார் கண்காணித்தனர். கள்ள நோட்டை மாற்ற முயன்ற 3 சிறுவர்களை பிடித்தனர். வயது 14 முதல் 16 வரை இருக்கும். மூவரில் ஒருவன் உறவினருக்கு சொந்தமான போட்டோ ஸ்டுடியோவில் சமீபத்தில்தான் வேலைக்கு சேர்ந்தான். கம்ப்யூட்டரில் தெரியும் போட்டோ அப்படியே அச்சு பிசகாமல் பிரின்டாக வருவதை பார்த்த சிறுவனுக்கு ஒரு யோசனை உதித்தது. 200 ரூபாய் நோட்டை ஸ்கேன் செய்து, பிரின்ட் எடுத்தான். கோயில் திருவிழாவில் அந்த கள்ள நோட்டை கொடுத்து ஐஸ்கிரீம் வாங்கினான். மாட்டிக்கொள்ளவில்லை. தைரியம் வந்தது. 200, 100, 50, 20 ரூபாய் நோட்டுகளையும் ஸ்கேன் செய்து, பிரின்ட் எடுத்தான். நண்பர்களுடன் சேர்ந்து கோயில் திருவிழாக்களில் செலவு செய்தான். சினிமாவுக்கு போனார்கள். ஜாலியாக ஊர் சுற்றினர். சிறுவர்கள் கொடுத்தது கள்ள நோட்டு என்பதை கண்டுபிடித்த ஒரு பொம்மை கடைக்காரர், போலீசுக்கு தகவல் சொன்னார் சிறுவர்களை கைது செய்த போலீசார், தஞ்சை சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர். 32 ஆயிரத்து 300 ரூபாய் மதிப்புள்ள கள்ள நோட்டுகள், ஸ்கேன் மெஷின், கம்ப்யூட்டரை போலீசார் பறிமுதல் செய்யப்பட்டது.
வாசகர் கருத்து