மாவட்ட செய்திகள் ஜூன் 06,2023 | 12:12 IST
இந்தியாவில ஓய்வுக்கு பின்னர் வாழ்வதற்கு உகந்த நகரங்களின் பட்டியலில் கோவா முதலிடத்தை பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தில் கோவை உள்ளது. தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் கோவையில் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் தங்கள் வாழ்நாளை கழிக்க பலரும் விரும்புகிறார்கள். இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. கோவையில் நிலவும் இதமான சுழல் தான் பலரை இங்கு ஈர்க்கிறது. அடுத்து பாதுகாப்பு. தமிழகத்திலேயே குற்ற சம்பவங்கள் குறைவாக நடப்பது கோவையில் தான். மேலும் கோவை மக்களின் மென்மையான அணுகுமுறை, கலாசாரம், பேச்சு, பழக்க வழக்கம் போன்றவை மற்ற மாவட்ட மக்களை அதிகம் கவருவதாக உள்ளது. அதனால் தான் பெரும்பாலான முதியோர்கள் கோவையில் வசிக்க விரும்புகிறார்கள். கோவையிலிருந்து இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கு உடனடியாக செல்வதற்கு விமானம், ரயில், சாலை மார்க்கமாக செல்ல பஸ் வசதிகள் அதிகம் உள்ளன. இதே போல் வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டுமென்றாலும் கோவையிலிருந்து விமான சேவைகள் அதிகம் உள்ளன. வயதான நாட்களில் கோவையில் வசிப்பவர்கள் இயற்கை காட்சிகளை ரசிப்பதற்காக மேற்கு தொடர்ச்சி மலையை யொட்டி உள்ள பகுதிகள் அவர்களுக்கு அமைதியான மனநிலையை ஏற்படுத்தக்கூடியவையாக அமைந்துள்ளன. எல்லாவற்றிற்கும் மேலாக வயதானவர்களுக்கு முக்கிய தேவையாக இருப்பது உடல் நிலையை பராமரிக்கும் மருத்துவமனைகள். சென்னையை விட பல மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகள் கோவையில் உள்ளன. வயதானவர்களுக்கு தேவைப்படும் அனைத்து வகையான சிகிச்சைகளும் கோவை மருத்துவமனைகளில் கிடைப்பதால் பலருடைய ஓய்வு கால விருப்பமாக கோவை விளங்குகிறது.
வாசகர் கருத்து