மாவட்ட செய்திகள் ஜூன் 06,2023 | 14:31 IST
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் ஒட்டுக்குளம், பெரியகுளம், செங்குளம், செட்டிக்குளம், தினைக்குளம், கரிசல்குளம் மற்றும் அம்மாபட்டி குளம் என ஏழு குளங்கள் உள்ளன. பழமையான குளங்களின் கரைகளில் 600 க்கும் மேற்பட்ட பனை மரங்கள் உள்ளன. பனை நுங்கு எடுக்க நகராட்சி சார்பில் ஆண்டு தோறும் ஏலம் விடப்படுகிறது. உடுமலை ஊராட்சியாக இருந்தபோது முதல் முறையாக கடந்த 1963 ம் ஆண்டு 1,400 பனை மரங்களில் நுங்கு வெட்ட ஆண்டுக்கு 120 ரூபாய் ஏலம் நிர்ணயிக்கப்பட்டது. அப்போது 15 வயது சின்னதம்பி என்ற சிறுவன் ஏலம் எடுத்தான். தொடர்ந்து 60 ஆண்டுகளாக சின்னதம்பி ஏலம் எடுத்து வருகிறார். தற்போது அவருக்கு வயது 75. பனை மரங்களின் எண்ணிக்கை பாதியாக குறைந்து தற்போது வெறும் 600 எண்ணிக்கையில் மட்டுமே உள்ளன. அவற்றில் 100 மரங்களில் மட்டுமே நுங்கு கிடைக்கிறது. ஓராண்க்கு நுங்கு வெட்ட கடந்த 2022 ம் ஆண்டு 27,900 ரூபாய்க்கு நகராட்சி ஏலம் விட்டது. ஆண்டு தோறும் ஏலத் தொகையை நகராட்சி நிர்வாகம் உயர்த்தி வருவதால் பனை தொழிலார்களுக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. இரவு நேரங்களில் நுங்கு திருட்டும் அமோகமாக நடக்கிறது. தடுக்க வேண்டிய நகராட்சி நிர்வாகம் மவுனம் சாதிப்பதாக தொழிலார்கள் குற்றம் சுமத்துகின்றனர். ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நுங்கு கிடைக்கும். நுாறு மரங்களில் மட்டுமே காப்பு கிடைப்பதால் பனை தொழிலாளர்களுக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. நுங்கு திருட்டை தடுக்க முடியாததால் தொழிலார்களின் வாழ்வாதாரம் கேள்விக்குரியாகி வருகிறது. தொழிலாளர்களின் நலன் கருதி ஏலத் தொகையை குறைக்க வேண்டும். நுங்கு திருட்டுக்கு நிரந்தர தீர்வு காண நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழிலாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
வாசகர் கருத்து