மாவட்ட செய்திகள் ஜூன் 07,2023 | 20:34 IST
சென்னை அரக்கோணத்தில் இருந்து சென்ட்ரலுக்கு புதன் அதிகாலை ரயில் இன்ஜின் சோதனை ஓட்டம் நடந்தது. திருநின்றவூர் ரயில்வே ஸ்டேஷனை தாண்டியதும் மர்ம பொருள் ஒன்று இன்ஜினில் சிக்கியது. உடனே கீழே இறங்கி பார்த்த இன்ஜின் டிரைவர் அதிர்ச்சி அடைந்தார். பெரிய தென்னை மரக்கட்டை ஒன்று சிக்கி இருந்தது. அதை அவர் வீடியோ எடுத்தார். அரை மணி நேரம் போராடி அகற்றினார். மர்ம நபர்கள் அதை தண்டவாளத்தில் வீசி சென்றது தெரிந்தது. மரக்கட்டை, வீடியோ ஆதாரத்தை ஆவடி ரயில்வே போலீசாரிடம் இன்ஜின் டிரைவர் ஒப்படைத்தார். சம்பவ இடத்துக்கு சென்று போலீசார் ஆய்வு செய்தனர். அதே பகுதியை சேர்ந்த செந்தில் என்பவர் தனது வீட்டில் நின்ற தென்னை மரத்தை சமீபத்தில் வெட்டியது தெரிந்தது. அவர் தண்டவாளம் பக்கத்தில் இருந்த குப்பை கிடங்கில் தென்னை மர கட்டைகளை வீசி சென்றுள்ளார். அதை எடுத்து மர்ம நபர்கள் தண்டவாளத்தில் போட்டது தெரிந்தது. சந்தேகத்தில் அடிப்படையில் அதே பகுதியை சேர்ந்த சிலரை பிடித்து போலீசார் விசாரிக்கின்றனர். ரயில் இன்ஜின் மிதமான வேகத்தில் வந்ததால் தப்பித்தது. ஒரு வேளை எக்ஸ்பிரஸ் ரயில் வந்திருந்தால் பெரிய அளவில் விபரீதம் நடந்திருக்க கூடும் என்று ரயில்வே அதிகாரிகள் கூறினர்.
வாசகர் கருத்து