மாவட்ட செய்திகள் ஜூன் 08,2023 | 13:00 IST
கோவை மாவட்டம் வரதராஜ் லே அவுட் பகுதியை சேர்ந்தவர் சந்திர பாலன் (75). இவரது முதல் மனைவி மாணிக்கம்.சந்திர பாலன் லேத் மெஷின் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார். சந்திரபாலன் - மாணிக்கம் தம்பதியினருக்கு குழந்தைகள் இல்லை. மாணிக்கத்தின் சம்மதத்துடன் கல்பனா என்ற பெண்ணை சந்திரபாலன் 2வது திருமணம் செய்து கொண்டார் .இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர் . சந்திர பாலன் தனது முதல் மனைவி மாணிக்கம் மற்றும் இரண்டாவது மனைவி கல்பனா மற்றும் குழந்தைகளுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். 2வது திருமணம் செய்வதற்கு முன்பு சந்திரபாலன், மனைவி மாணிக்கம் பெயரில் இடத்தை வாங்கி அதில் கீழ் பகுதியில் ஒர்க்ஷாப் மாடியில் வீடும் கட்டி குடியேறினார். 2017ல் சந்திர பாலன் ஊரில் இல்லாத சமயத்தில் மாணிக்கத்தை அவரது சகோதரர்கள் தங்களது சொந்த ஊரான உடுமலைப்பேட்டைக்கு அழைத்து சென்றனர் . மாணிக்கத்தின் பேரில் உள்ள சொத்தை அபகரிக்க சகோதரர்கள் திட்டமிட்டது சந்திர பாலனுக்கு தெரியவே சந்திர பாலன் வழக்கு தொடர்ந்தார். வழக்கு நிலுவையில் இருந்தபோது சொத்து பத்திரங்களை காணவில்லை என 2020ல் சரவணம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் தவறான தகவலை அளித்து சார் பதிவாளர் அலுவலகத்தில் இருந்து சொத்து ஆவணத்தை மாணிக்கம் மற்றும் அவரது சகோதரர்கள் மறுபடியும் பெற்றனர். தகவல் அறிந்த சந்திர பாலன் கோவை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தார். 2020ல் மாணிக்கம், மகாலட்சுமி என்பவருக்கு சொத்தை கிரையம் செய்து கொடுத்ததாக போலி ஆவணத்தை ஏற்படுத்தி உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை மகாலட்சுமி மற்றும் அவரது கணவர் மதனகோபால் மற்றும் அதிகாரிகள் சிலர் சந்திர பாலனின் நிறுவனம் மற்றும் வீட்டிற்கு வந்து தகராறு செய்தனர். இந்நிலையில் நேற்று மாலை மகாலட்சுமி அவரது கணவர் மதனகோபால் மற்றும் காட்டூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனியம்மாள் உட்பட போலீசார் சந்திரபாலனின் வீட்டிற்கு சென்றனர். அங்கிருந்த சந்திர பாலன் மற்றும் அவரது மனைவி மற்றும் மகள்களை அடித்து உதைத்து வெளியேற்றினர் .இது பற்றிய சிசிடிவி காட்சிகள் வெளியானது. இதைத்தொடர்ந்து சந்திரபாலன் மற்றும் அவரது குடும்பத்தார் இன்று கோவை மாநகர போலீஸ் கமிஷனரை சந்தித்த புகார் மனு அளித்தனர் புகாரில் அத்துமீறி அராஜகத்தில் ஈடுபட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனியம்மாள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.
வாசகர் கருத்து