குளிர்காலத்தில் கூந்தலைப் பராமரிக்க எளிதான வழிகள்!...

குளிர்காலத்தில் வறண்ட காற்றால் கூந்தல் உதிர்வு, பொடுகு போன்ற பிரச்னைகள் உண்டாகிறது. மேலும், பலரும் சருமத்தை பராமரிக்கும் அளவுக்கு கூந்தலுக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை.


ஆனால், குளிர்காலத்தில் தான் கூந்தல் வறட்சி மற்றும் உடைதல், உச்சந்தலையில் அரிப்பு உள்ளிட்டவை ஏற்படும். எனவே, கூந்தலுக்கு சிறப்பு கவனிப்பு தேவைப்படுவதால், சில டிப்ஸ்...

உங்களின் கூந்தலை வேர் முதல் நுனி வரை ஆரோக்கியமாக பாதுகாக்க, தினமும் மூன்று லிட்., தண்ணீராவது குடிக்க வேண்டும். இது சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைக்க உதவுகிறது.

பாதாம், முந்திரி, வேர்க்கடலை, பூசணி விதைகளை உணவில் அதிகளவில் சேர்க்க வேண்டும். இதிலுள்ள புரதச்சத்து கூந்தலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, பளபளப்பாக வைக்க உதவுகிறது.

சூடான தண்ணீரில் தலைக்கு குளித்தால் கூந்தல் உடைதல், உச்சந்தலையில் தோலுரிதல் ஏற்படக்கூடும் என்பதால், வெதுவெதுப்பான தண்ணீரை பயன்படுத்தி கூந்தலை அலசவும்.

குளிர்காலத்தில் கூந்தல் வறட்சியாவதை தவிர்க்க, கண்டிஷனர் பயன்படுத்தலாம். இது கூந்தலை மென்மையாக வைக்க உதவுகிறது.

நீங்கள் ரசாயனப் பொருட்களைப் பயன்படுத்த விரும்பவில்லை என்றால் கூந்தலின் நுனிகளில், ஓரிரு துளிகள் தேங்காய் எண்ணெய் வைக்கலாம்; இதனால், வெடிப்புகளை தவிர்க்கலாம்.

கூந்தல் உதிர்தல் மற்றும் உடைதல், நிறம் மாறுதல் போன்ற பாதிப்புகளை தவிர்க்க, தலைக்கு குளித்தவுடன் சரிவர கூந்தலை உலர்த்துவது முக்கியமான ஒன்றாகும்.

Web Stories

மேலும் தினமலர் ஸ்டோரீஸ் படிக்க...