இந்திய கைத்தறியும் பேஷனும்... அதிதி பெருமிதம் !

கார்த்தி ஜோடியாக, 'காற்று வெளியிடை' படத்தில் தமிழில் அறிமுகமானவர் பாலிவுட் நடிகை அதிதி ராவ் ஹைதாரி. 'ஹே சினாமிகா' படத்தின் மூலம் அனைவருக்கும் நன்கு பரிட்சயமாகியுள்ளார்.

அடிக்கடி பேஷன் ஷோக்கள், விழாக்களில் பங்கேற்று விதவிதமான உடைகளில் உலா வருவார்; அழகிய பேஷன் உடைகளில் அசத்தும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிடுவது வாடிக்கை.

சமீபத்தில் மும்பையில் நடந்த நிகழ்ச்சியில், பிரபல ஆடை வடிவமைப்பாளர் பாயல் கந்த்வாலா வடிவமைத்த, கைகளால் நெய்யப்பட்ட பட்டு ரகத்தினாலான ஜம்ப்சூட் அணிந்திருந்தார்.

இந்த ஜம்ப்சூட் உடையில் விதவிதமான போஸ்களில், அழகிய புகைப்படங்களை தன் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார் அதிதி.

அதில், 'இந்திய கைத்தறி நமது சக்தி வாய்ந்த, அழகான பேஷன் பொக்கிஷங்களில் ஒன்றாகும். அதை சொந்தமாக வைத்து, அணிந்து கொள்ளுங்கள்; கைத்தறியை கொண்டாடுங்கள்' எனக் கூறியுள்ளார்.

இளஞ்சிவப்பு நிறத்தினாலான அந்த ஜம்ப்சூட், எளிதாக நடக்கும் வகையில் பிளேசர் போன்று அகலமான கால்களுடன் வடிவமைக்கப்பட்டிருந்தது.

கால்கள் மற்றும் கைகளில் ஜரிகை வேலைப்பாடுடன் கூடிய பார்டர்கள் இருந்தன. மேலும், இடுப்பருகே இருந்த பாக்கெட்டுகள் ஸ்டைலிஷான தோற்றத்தை அளித்தன.

பட்டு உடைக்கேற்ப வைரம், மரகதக் கற்களால் அலங்கரிக்கப்பட்ட மெல்லிய நகைகளை அணிந்து பாரம்பரியம் மாறாத பேஷன் உடையில் ஜொலித்தார் அதிதி.


மார்டன் உடைகளைப் போன்றே கைத்தறி உடைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் அதிதி, அவ்வப்போது கைத்தறி லெஹங்கா, பட்டு புடவைகளில் அழகிய புகைப்படங்களை பதிவிடுகிறார்.

Web Stories

மேலும் தினமலர் ஸ்டோரீஸ் படிக்க...