சென்னைக்கு கிடைக்குமா 5வது கோப்பை: குஜராத் அணியுடன் பைனல்

ஆமதாபாத்தில் உள்ள உலகின் பெரிய மோடி மைதானத்தில் இன்று நடக்கும் பைனலில், தோனி தலைமையிலான சென்னை அணி, ஹர்திக் பாண்ட்யா வழிநடத்தும் குஜராத் அணியை சந்திக்கிறது.

கடந்த ஆண்டு லீக் சுற்றோடு திரும்பிய சென்னை அணி, இம்முறை எழுச்சி கண்டு 10வது முறையாக பைனலுக்குள் நுழைந்தது. இதற்கு, கான்வே, ருதுராஜ் கெய்க்வாட் ஜோடி முக்கிய காரணம்.

குஜராத் அணிக்கு எதிரான தகுதிச் சுற்று-1ல் சிறப்பான துவக்கம் தந்த இந்த ஜோடி, இன்றைய பைனலிலும் கைகொடுக்கலாம். இம்முறை 33 சிக்சர் விளாசிய ஷிவம் துபே 'மிடில்-ஆர்டரில்' பலம் சேர்க்கிறார்.

ரகானே (299 ரன்), ரவிந்திர ஜடேஜா (175) அசத்தினால், இமாலய ஸ்கோரை பெறலாம். இந்த சீசனுடன் ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படும் கேப்டன் தோனி, 'பினிஷர்' பணியை கச்சிதமாக செய்யலாம்.

வேகப்பந்துவீச்சில் துஷார் தேஷ்பாண்டே (21 விக்கெட்), மதீஷா பதிரானா (17), தீபக் சகார் (12) பலம் சேர்க்கின்றனர். 'சுழலில்' ரவிந்திர ஜடேஜா (19 விக்கெட்), தீக்சனா (11), மொயீன் அலி (9) கூட்டணி நம்பிக்கை தருகிறது.

கடந்த சீசனில் அறிமுகமான குஜராத் அணி, முதன்முறையாக கோப்பை வென்று சாதித்தது. இம்முறை சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. தொடர்ந்து 2வது முறையாக பைனலுக்கு முன்னேறியது.

பேட்டிங்கில் இளம் வீரர் சுப்மன் கில் நம்பிக்கை அளிக்கிறார். 16 போட்டியில், 3 சதம், 4 அரைசதம் உட்பட 851 ரன் குவித்துள்ளார். இவரது அசத்தல் ஆட்டம் இன்றும் தொடர்ந்தால் சென்னைக்கு சிக்கலாகிவிடும்.

இவருடன் சேர்ந்து சகா (317) நல்ல துவக்கம் தருவது பலம். கேப்டன் ஹர்திக் பாண்ட்யா (325 ரன்), விஜய் சங்கர் (301), சாய் சுதர்சன் (266) நம்பிக்கை தருகின்றனர். 'பினிஷராக' டேவிட் மில்லர் (259), டிவாட்யா அதிரடி காட்டலாம்.

குஜராத் அணியின் பந்துவீச்சு பலமாக உள்ளது. 'வேகத்தில்' முகமது ஷமி (28 விக்கெட்), மோகித் சர்மா (24) மிரட்டுகின்றனர். 'சுழலில்' ரஷித் கான் (27 விக்கெட்), நுார் அகமது (14) கைகொடுக்கின்றனர்.

Web Stories

மேலும் தினமலர் ஸ்டோரீஸ் படிக்க...