PUBLISHED ON : செப் 14, 2016

தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் திவ்யா, தன் அம்மாவுடன் என்னைப் பார்க்க வந்தார். 'என் ஹஸ்பெண்டை சுத்தமா பிடிக்கலை; டைவர்ஸ் பண்ணிடலான்னு முடிவு பண்ணிட்டேன். அதுக்கு முன்னாடி உங்ககிட்ட ஒரு அட்வைஸ் கேட்கலான்னு வந்தேன்' என்றார்.
உடனிருந்த அம்மா, 'இது என் பொண்ணோட வாழ்க்கை; அவளுக்கு எது சரின்னு படுதோ அதைச் செய்யட்டும்' என்ற ரீதியில், திவ்யாவின் முடிவிற்கு சப்போர்ட் செய்து பேசினார்.
'உங்க ஹஸ்பெண்ட் எப்படி?' என்று கேட்டதற்கு, 'அவர் சைக்கோ மாதிரி தான் பேசுறார். அம்மா, அப்பாவுக்குத் தான் எல்லா முக்கியத்துவமும் தர்றார்; என், உணர்வுகளை புரிந்து கொள்வதே
கிடையாது. தனிக் குடித்தனம் கூப்பிட்டாலும் வர மாட்டார். இதுவரையிலும், ஒரு கிப்ட் கூட வாங்கி தந்ததில்லை' என்றார்.
திவ்யாவிற்கும், அரவிந்திற்கும் திருமணமான ஆறு ஆண்டுகளில், முதல் இரண்டு ஆண்டுகளில் எந்தப் பிரச்னையும் இல்லை. அடுத்து, அவர்களிடையே சின்னச் சின்னதாக பிரச்னைகள் வர ஆரம்பிக்க, திவ்யா அடிக்கடி அம்மா வீட்டிற்கு வந்து புலம்புவதால் அவரது அம்மா, கணவரைப் பிரிந்து மகள் தனியாக வருவதிலேயே குறியாக இருந்தார்.
'சரி, உங்க ஹஸ்பெண்டையும் வரச் சொல்லி பேசுவோம்' என்றேன்; அவர் வரவேமாட்டார் என்று உறுதியாகச் சொன்னார். அவரது தொடர்பு எண்ணை வாங்கி, பேசிய பிறகு தான் புரிந்தது, பிரச்னை மொத்தமும் திவ்யாவிடம் இருப்பது.
திவ்யா குழந்தையாக இருந்த போதே, கணவனை விட்டு பிரிந்து வந்துவிட்டார் அவரது அம்மா. அம்மாவிடம் இருந்தும், முழுமையான அன்பு, பாதுகாப்பு திவ்யாவிற்கு கிடைக்கவில்லை. விபரம் தெரிந்த நாளிலிருந்து, தனக்கு பெற்றோரிடம் கிடைக்காத அன்பையும்
அரவணைப்பையும் திருமண வாழ்வு தரும் என்ற எதிர்பார்ப்பிலேயே நிறைய கற்பனைகளை வளர்த்து வைத்திருந்தார்; தான் கற்பனை செய்த விஷயங்கள் யதார்த்தத்தில் வேறு மாதிரியாக இருக்க, ஒவ்வொரு நாளும் ஏமாற்றம். இதுபோல எந்தக் கற்பனையும் எதிர்பார்ப்பும் இல்லாமல் இயல்பாக வளர்ந்தவர் அரவிந்த். அதனால், திவ்யாவிற்கு என்ன தான் பிரச்னை என்பதே அவருக்குப் புரியவில்லை.
தனித்தனியாகவும், இருவரையும் சேர்த்து வைத்தும், 6 செஷன்கள் கவுன்சிலிங் கொடுத்தேன். அரவிந்திடம், 'தன் மேல் யாரும் அன்பாக இல்லை என்ற ஏக்கத்துடனேயே, உங்கள் மனைவி வளர்ந்திருக்கிறார்; அதனால், இத்தனை ஆண்டுகளாக கிடைக்காத அன்பு மொத்தத்தையும் உங்களிடம் எதிர்பார்க்கிறார். நீங்கள் பெரிதாக எதுவும் செய்ய வேண்டாம். அவர் சமையல் செய்யும் போது காய்கறி நறுக்குவது; அவரது அருகில் அமர்ந்து, அவர் சொல்லும் வேலைகளை செய்வது என, சிறிது நேரம் இருங்கள். இரவிலும், எப்போதும் போன், 'டிவி' என்று இருக்காமல், ஒரு மணிநேரம் மனைவியுடன் பேசுங்கள்; அவர் சொல்வதை காது கொடுத்துக் கேளுங்கள். அவருக்கு இருப்பதெல்லாம் சின்னச் சின்ன விருப்பங்கள் தான்.
எப்படி உடல்ரீதியாக ஆணும் பெண்ணும் இயற்கையிலேயே வேறுவேறு மாதிரியோ
அப்படித்தான் மன ரீதியிலும். இருவரும், இருவேறு கெமிஸ்ட்ரி. தேவைகளும், எதிர்பார்ப்புகளும் இருவருக்கும் வித்தியாசப்படும்.
அதைப் புரிந்து கொண்டால் போதும்; பிரச்னைகளே வராது என்றேன்.
இருவரிடமும் தற்போது நிறைய மாற்றங்கள் வர ஆரம்பித்து உள்ளன. 15 நாட்களுக்கு ஒருமுறை வந்து ஆலோசனை பெற்றுச் செல்கிறார்கள்.
பி.இளையராஜா
மனோதத்துவ நிபுணர்
99623 46966
