
டிசம்பர் 18, 1856 : ஜே.ஜே. தாம்சன் பிறந்த நாள்
நவீன அணு இயற்பியலின் தந்தை. மின்னணுவியல், காந்தவியலில் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டவர் மின்னிறக்க குழாயில் மின்சாரத்தைச் செலுத்தும்போது ஏற்படும் விளைவுகளைக் கண்டறிந்ததற்காக, 1906ல் நோபல் பரிசு பெற்று இருக்கிறார்.
டிசம்பர் 18, 2000: சர்வதேச புலம் பெயர்ந்தோர் நாள்
வேலைக்காக வெளிநாடு செல்லும் தொழிலாளர்களுக்கு, சட்டப்படியான உரிமைகள் கிடைப்பதில்லை. ஒவ்வொரு நாடும், தங்கள் நாட்டில் குடியேறுபவர்களை, தனது சொத்தாக மதித்து நடத்த வேண்டும் என்பதற்காக, ஐ.நா.சபையால் இந்த தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
டிசம்பர் 19, 1934: பிரதிபா பாட்டீல் பிறந்த நாள்
இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவர். 12வது குடியரசு தலைவராக இருந்தவர். வழக்கறிஞராக வாழ்க்கையைத் தொடங்கி, சட்டமன்ற, உறுப்பினர் ஆனார். 2004ல் ராஜஸ்தான் மாநில ஆளுநராகப் பணியாற்றி இருக்கிறார்.
டிசம்பர் 22, 1666: குரு கோவிந்த் சிங் பிறந்த நாள்
சீக்கிய மதத்தவரின் பத்தாவது குரு. அரபி, பெர்சியன், சமஸ்கிருதம் போன்ற மொழிகளைக் கற்றுத் தேர்ந்தவர். பிற்கால சீக்கிய மதக் கோட்பாடுக்களுக்கு வித்திட்டவர். 'குரு கிரந்த் சாகிப்' என்கிற சீக்கிய மதநூலை, புனித நூலாக்கி இருக்கிறார்.
டிசம்பர் 22, 1887: சீனிவாச ராமானுஜன் பிறந்த நாள்
20ம் நூற்றாண்டில், உலகத்தை வியக்க வைத்த தமிழ்நாட்டு கணித மேதை. குறுகிய காலத்திலேயே, 3000க்கும் அதிகமான புதுக் கணிதத் தேற்றங்களைக் கண்டுபிடித்தவர். எண்களின் பகுப்பாய்வு கோட்பாடு, முடிவிலா தொடர் போன்ற இவரது ஆய்வுகள் குறிப்பிடத்தக்கவை.
டிசம்பர் 23, 1902: சரண்சிங் பிறந்த நாள்
இந்தியாவின் ஐந்தாவது பிரதமர். ஜூலை 1979 முதல் ஜனவரி 1980 வரை, குறுகிய காலம் மட்டுமே பிரதமராகப் பணியாற்றினார். உத்தர பிரதேச மாநிலத்தின் நிலச் சீர்திருத்தங்களில், முக்கிய பங்கு இவருக்கு உண்டு.
டிசம்பர் 25, 1876: முகமது அலி ஜின்னா பிறந்த நாள்
விடுதலைக்குப் பிறகு, இந்தியா பிரிக்கப்பட்டு பாகிஸ்தான் என்கிற தனிநாடு ஏற்படக் காரணமாக இருந்தவர். இவரின் பிறந்த நாள், பாகிஸ்தானில் தேசிய திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. பாகிஸ்தானின் முதல் தலைமை ஆளுநரும் இவரே.
டிசம்பர் 25, 1924: அடல் பிஹாரி வாஜ்பாய் பிறந்த நாள்
இந்தியாவின் 10வது பிரதமர். 1996ல் சில நாட்களும், 1998ல் இருந்து 2004 வரையிலும், பிரதமராகப் பதவி வகித்தவர். 1991ல் 'சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர்' என்ற பட்டமும், பத்ம பூஷன் விருதும் இவருக்கு வழங்கப்பட்டு இருக்கிறது.

