இசை, இயக்கம் மற்றும் பாரம்பரியத்தின் மூலம் பண்பாடுகளை இணைக்கும் விழா
இசை, இயக்கம் மற்றும் பாரம்பரியத்தின் மூலம் பண்பாடுகளை இணைக்கும் விழா
ஏப் 07, 2026

ஆர்ட் டு ஹார்ட் இன்ஸ்டிடியூட் (Art to Heart Institute) வழங்கிய ராகா ரிதம் பெஸ்ட் 2026 (RagaRhythm Fest 2026), நார்வேயில் இசை ரசிகர்கள், வளர்ந்து வரும் இளம் கலைஞர்கள் மற்றும் அனுபவமுள்ள கலைஞர்களை ஒன்றிணைத்த விழாவாக அமைந்தது. Young in Action, Eternal Tunes of Saint Tyagaraja, மற்றும் Nordic Morning எனும் மூன்று தனித்துவமான மற்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய நிகழ்வுகளின் மூலம், இந்திய சாஸ்திரிய இசை பல்வேறு பண்பாடுகளையும் தலைமுறைகளையும் இணைக்கும் வலுவான பாலமாக எவ்வாறு செயல்படுகிறது என்பதை இந்த விழா வெளிப்படுத்தியது.
கலாச்சார இயக்குநரகம் (Kulturdirektoratet), Baerum நகரசபை (Bærum kommune) மற்றும் உள்ளூர் கலாச்சார அமைப்புகளின் ஆதரவுடன் நடைபெற்ற இந்த ஆண்டின் விழா, பங்கேற்பு, பலவிதமான பண்பாட்டு பரிமாற்றம் மற்றும் கலை ரசனையை நோக்கமாகக் கொண்டு திட்டமிடப்பட்டது.
முதல் விழாவான/நிகழ்வான Young in Action - 7ஆம் மார்ச் 2026 அன்று Varmesentralen, Fornebu-வில் நிகழ்ந்தது. இந்த நிகழ்ச்சி ஆர்ட் டு ஹார்ட் இன்ஸ்டிடியூட்டின் (Art to Heart Institute) நிறுவனர் மற்றும் தலைவர் உமா ரங்கநாதனால் இயக்கப்பட்டது.
நார்வேயிலிருந்து ஒன்பது வளர்ந்து வரும் பல்வேறு நாட்டைச் சேர்ந்த இளம் கலைஞர்கள் இதில் பங்கேற்றனர். , இந்திய சாஸ்திரிய மரபுகளையும் பிற இசை கலாச்சாரங்கள் பல்வேறு இசை தாக்கங்களையும் இணைத்த சொந்த படைப்புகளை வழங்கினர். ஒவ்வொரு பாடலும் உலக அமைதி, ஒற்றுமை மற்றும் உள்ளார்ந்த சிந்தனை போன்ற சமூகச் செய்திகளை எடுத்துரைத்தது.
சுமார் 100 பேர் பங்கேற்ற இந்த நிகழ்ச்சி, அதன் படைப்பாற்றலுக்காக மட்டுமன்றி நிகழ்வு மூலம் சொல்லப்பட்ட கருத்துக்காகவும் பாராட்டப்பட்டது. இசை பல்வேறு பண்பாடுகளையும் இசை வகைகளையும் இணைக்கும் சக்திவாய்ந்த ஊடகமாக இருப்பதை இந்த நிகழ்ச்சி தெளிவாகக் காட்டியது என பார்வையாளர்கள் கருத்துத் தெரிவித்தனர். இளம் கலைஞர்களின் இந்தக் கூட்டு முயற்சி எல்லைகள் கடந்த சங்கீதத்தை அரங்கேற்றியது. இது பாரம்பரியத்தை புதுமையுடன் இணைக்கும் ஒரு நிகழ்வாக அமைந்தது.
இரண்டாவது நிகழ்ச்சி தியாகராஜ சுவாமிகளின் ஆராதனை விழாவாக, பஞ்சரத்ன கீர்த்தனைகளை மையமாகக் கொண்டு நடைபெற்றது (Eternal Tunes of Saint Tyagaraja), 14ஆம் மார்ச் 2026 அன்று Varmesentralen, Fornebu-வில் நடைபெற்றது. பக்தியும் பாரம்பரியமும் மையமாக கொண்ட இந்த நிகழ்ச்சி, மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜ சுவாமிகளின் கீர்த்தனைகளை கொண்டாடும் நிகழ்வாக அமைந்தது. நார்வே, ஸ்வீடன் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து 30-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் மற்றும் அனுபவமுள்ள இசைக்கலைஞர்கள் கலந்து கொண்டு, வளமான மற்றும் ஆழமான இசை அனுபவத்தை பார்வையாளர்களுக்கு வழங்கினர்.
சுமார் 120 பேர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியின் பிரதான நிகழ்வாக தியாகராஜ சுவாமிகளின் பஞ்சரத்தின கீர்த்தனைகளை அனைத்து கலைஞர்களும் சேர்த்து வழங்கினர். பார்வையாளர்களுக்கு அரிய ஆன்மீக அனுபவமாக அமைந்தது.
மூன்றாவது மற்றும் நிறைவு நிகழ்ச்சியாக Nordic Morning, 15ஆம் மார்ச் 2026 அன்று Høvik-ல் நடைபெற்றது. இது இசையை அனுபவிக்க சொல்லித் தரும் புதுமையான முயற்சியாக அமைந்தது. சுமார் 35 பேர் கலந்து கொண்டு இந்த நிகழ்ச்சி நடை பயணத்துடன் ஆரம்பித்தது. நடைப்பயணத்தின் போது நடக்கும் கதி, இயக்கம், இயற்கை மற்றும் ஒலி கவனிக்க சிறிய பயிற்சிகள் கொடுக்கப்பட்டது.
இதற்குப் பிறகு, இந்திய சாஸ்திரிய இசையை மையமாக கொண்ட ஒரு கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட செவிமடுக்கும் அமர்வு (curated listening session) நடைபெற்றது. இதில் ராகம், தாளம், இசை அமைப்பு மற்றும் கலைஞர்களின் பரஸ்பர தொடர்பு போன்ற பல பரிமாணங்கள் விளக்கப்பட்டன. கலை ரசனையை அதிகரிக்கும் நோக்கில் வடிவமைக்கப்பட்ட இந்த அனுபவம், இசையை கேட்பதற்கு மட்டுமல்லாமல், அதை ஆழமாக உணரவும் பங்கேற்பாளர்களை ஊக்குவித்தது.
மொத்தத்தில், இந்த மூன்று நிகழ்ச்சிகளும் பல்வேறு சமூகங்களை சேர்ந்த மக்களை இணைத்து, அர்த்தமுள்ள தொடர்புகளை உருவாக்கின. பெரிய மேடை நிகழ்ச்சிகளிலிருந்து நெருக்கமான அனுபவ வடிவங்கள் வரை, கலை மனிதர்களுடன் இணையும் பல்வேறு வழிகளை இந்த விழா வெளிப்படுத்தியது.
நிகழ்ச்சிகளைத் தாண்டி, RagaRhythm Fest 2026-ன் உண்மையான தாக்கம், அது உருவாக்கிய உரையாடல்களில் உள்ளது—பண்பாடுகளுக்கிடையில், தலைமுறைகளுக்கிடையில், கலைஞர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கிடையில். இளம் கலைஞர்கள் மற்றும் அனுபவமுள்ள கலைஞர்கள் ஒரே மேடையில் சந்திக்கும் சூழலை உருவாக்கி, பாரம்பரியமும் புதுமையும் ஒன்றிணையும் இடமாக இந்த விழா திகழ்ந்தது.
ஆர்ட் டு ஹார்ட் இன்ஸ்டியூட் இசை மூலமாக கலை வளர்ச்சி கலை ரசனையை வளர்க்கும் முயற்சிக்கு வலு சேர்ப்பதாக அமைந்தது.
Advertisement

