60 சதவீதம் பேருக்கு அதீத வெப்ப பாதிப்பு: மருத்துவ பல்கலை ஆய்வில் தகவல்

தமிழ்நாடு எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை நடத்திய ஆய்வில், 60 சதவீதம் பேருக்கு அதீத வெப்பம் சார்ந்த உடல்நல பாதிப்புகள் ஏற்படும் அபாயம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

சமூகத்தில் வெப்பவாதம் மற்றும் அது சார்ந்த பாதிப்புகள் குறித்த புரிதல் எந்த அளவு உள்ளது என்பதை அறிய ஆய்வு எடுக்கப்பட்டது.

80 சதவீதம் பேர் வெப்பநிலை அதிகரிக்க, பருவநிலை மாற்றங்களே காரணம் என அறிந்துள்ளனர்.

அதில் கவலைக்குரிய விஷயம் என்னவெனில், 11 சதவீதம் பேர் மட்டுமே, வெப்ப வாதத்தின் தீவிரம் மற்றும் அதன் விளைவுகளை உணர்ந்துள்ளனர்.

ஆய்வில் பங்கேற்றவர்களில் 50 சதவீதம் பேருக்கு, அதீத வெப்பத்தை எதிர்கொள்வதற்கான மாற்று இடங்களோ, குளிர்வான இடங்களோ இல்லை.

வெப்ப அலை தொடர்பாக வெளியிடப்படும் அறிவுரைகள், 29 சதவீதம் பேருக்கு புரிவதில்லை.

இந்த ஆய்வு வாயிலாக, 60 சதவீதம் பேர் அதீத வெப்பம் சார்ந்த உடல்நல பாதிப்புகளுக்கு உள்ளாகும் அபாயத்தில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், 46 சதவீதம் பேர், பருவ நிலை மாற்றம், திடீரென அதிகரிக்கும் கோடை வெப்ப சூழல்களால் நீர்ச்சத்து இழப்பு, வெப்ப வாதத்தால் பாதிக்கப்படுகின்றனர்.