பாரம்பரிய பொம்மை ரயிலில் ஊட்டிக்கு ஒரு டிரிப் போலாமா !
கோடை என்றாலே ஊட்டி, கொடைக்கானல் என்பது பலரின் சாய்ஸாக உள்ளது.
இதற்கேற்ப வரும் மார்ச் 29 முதல் ஜூலை 1 வரை சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில், ஊட்டிக்கு பொம்மை ரயில் இயக்கப்படுவதாக, தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் அறிவித்துள்ளது.
மேட்டுப்பாளையம் - ஊட்டி இடையே இந்த பாரம்பரிய பொம்மை மலை ரயில் இயக்கப்படுகிறது. யுனெஸ்கோ பாரம்பரிய சின்னமான இது, இந்தியாவின் பொம்மை ரயில்களில் ஒன்றாகும்.
மேட்டுப்பாளையம் - குன்னூர் வரை நீராவி இஞ்சினும், பின் டீசல் இஞ்சினும் பயன்படுத்தப்படுகிறது.
மலைப்பாதையில் 1,070 அடியிலிருந்து 7,228 அடி வரை இந்த ரயில் வானத்தை நோக்கி செல்வது, அன்று சாதனையாக இருந்தது.
1908ம் ஆண்டு மலை ரயில் பயணம் துவக்கப்பட்ட நிலையில் 2005ல் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டது.
மேட்டுப்பாளையம்- குன்னூர் இடையே மிகவும் சரிவான பாதை என்பதால் தண்டவாளத்தின் நடுவே பல்சக்கரம் அமைக்கப்பட்டுள்ளது.
மலைப்பாதையில் 208 வளைவுகள், 16 குகைகள் மற்றும் 250 பாலங்களை இந்த ரயில் கடக்கிறது. இதனால், பயணதூரம் 46 கி.மீ., என்றாலும் ஊட்டியை அடைய ஐந்தரை மணி நேரமாகிறது.
பச்சைப்பசேலென்ற காடுகள், அழகிய பள்ளத்தாக்குகள், பசுமையான தேயிலைத் தோட்டங்கள், சத்தமிடும் பட்சிகள், நீரோடைகள், காட்டு மிருகங்கள் என வழியெங்கும் இயற்கை அன்னையின் விருந்தை ரசிக்கலாம்.
இந்த பாரம்பரிய ரயிலில் பயணம் செய்வது நிச்சயம் நம் வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு அனுபவத்தை தரக்கூடும்.