குற்றவாளிகளை துல்லியமாக அடையாளம் காட்டும் ஏஐ கண்ணாடி
கூட்டமான இடங்களில், குற்றவாளிகளை அடையாளம் காண வசதியாக, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கொண்ட ஸ்மார்ட் கண்ணாடிகளை டில்லி போலீசார் பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.
சமீபத்தில் டில்லி ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தில், குற்றப்பின்னணி கொண்ட 2500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதை போலீசார் கண்டறிந்தனர்.
டில்லி போலீசார், தங்களுக்காகவே இந்தியாவில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு (ஏஐ) ஸ்மார்ட் கண்ணாடிகளைப் பயன்படுத்துகின்றனர்.
இந்தக் கண்ணாடிகள் Ajnalens என்ற மும்பை நிறுவனத்தால் தயாரிக்கப்படுகின்றன.
இந்த கண்ணாடிகள் ஒருவரது முக அடையாளத்தை வைத்து, அவர் யார் என்று கண்டறியும் திறன் கொண்டவை.
அந்த கண்ணாடி அணிந்திருக்கும் ஒரு அதிகாரி உங்களைப் பார்க்கிறார். பார்த்த வினாடியிலேயே, உங்கள் முகத்தை ஸ்கேன் செய்து விடுகிறது.
சில மில்லி விநாடிகளில், அதன் நினைவகத்தில் சேமிக்கப்பட்டுள்ள 65,000 பதிவுகளுடன் ஒப்பிட்டு பார்க்கிறது.
நினைவகத்தில் ஏற்கனவே பதியப்பட்ட குற்றவாளிகள், தேடப்படும் நபர்களின் படத்துடன் ஒப்பிட்டு, அந்த நபராக நீங்கள் இருந்தால், அதிகாரியை எச்சரித்துவிடும்.
குருகிராமில் உள்ள ஒரு AI ஆராய்ச்சி நிறுவனத்தின் ஜார்விஸ் (Jarvis) என்ற மென்பொருள் கண்காணிப்பில் இந்த கண்ணாடி இயங்குகிறது. இந்த கண்ணாடிகளுக்கு இண்டர்நெட் தேவையில்லை.
இந்த ஜார்விஸ் (Jarvis) என்ற மென்பொருள், ராஜஸ்தானின் ஆல்வார் போலீசாருடன் இணைந்து குற்றப் பதிவுகளை டிஜிட்டல் மயமாக்கவும், காணாமல் போனவர்களைத் தேட உதவவும் உருவாக்கப்பட்டது.
தற்போது டில்லி போலீசார் குற்றவாளிகளை அடையாளம் காண்பதற்கான முக்கிய கருவியாக இந்த கண்ணாடி, அதன் மென்பொருளை பயன்படுத்தி வருகின்றனர்.