பால் குடிக்கும் குழந்தைகளுக்கு வரும் ரத்த சோகை
நம் நாட்டில் ஒண்ணரை முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு, ஊட்டச்சத்துக் குறைவால் வரும் இரும்புச்சத்து குறைபாடு அதிகமுள்ளது.
பால், பால் சார்ந்த பொருட்களையே அதிகளவில் சாப்பிட தருகிறோம். பாலில் புரதம், கால்சியம், சிறிதளவு விட்டமின்கள் அதிகளவில் உள்ளன; இரும்புச்சத்து கிடையாது.
விட்டமின் பி12 குறைபாடு, குடல் புழு, கொக்கி புழுக்களின் பாதிப்பு குடலில் இருந்தாலும் ரத்த சோகை வரலாம். எலும்பு மஜ்ஜை உற்பத்தி செய்யும் செல்கள் அழிவதாலும் ரத்த சோகை வரலாம்.
அளவுக்கு அதிகமாக பால் குடிக்கும் குழந்தைகள், தாய்ப்பாலுக்கு பதிலாக புட்டிப்பால் குடிக்கும் குழந்தைகள், சைவ உணவு மட்டுமே சாப்பிடுபவர்களுக்கு ரத்த சோகை வரும் அபாயம் அதிகம்.
ரத்தச்சோகையால் பாதிக்கப்பட்டிருந்தால் கன்னங்கள், உதடுகள், கண் இமைகளின் உட்புறம், விரல் நகங்கள், வழக்கமான இளஞ்சிவப்பு நிறத்தில் இல்லாமல் இருக்கக்கூடும்.
2 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு, வழக்கத்திற்கு மாறான பசி உணர்வு, மண், சிமென்ட், சாக்பீஸ், விபூதி சாப்பிடும் ஆர்வம், விளையாட்டில் ஆர்வம் குறைவதும் இதன் அறிகுறிகள்.
எனவே, இரும்புச்சத்து நிறைந்த அடர் பச்சை நிற காய்கறிகள், கேழ்வரகு போன்ற உணவுகளை 6 மாதத்திலேயே தர ஆரம்பிக்கலாம். ஓராண்டிற்குப் பின், அவித்த மீன், சிக்கன், முட்டை தரலாம்.
இரும்புச்சத்து டானிக், 3 மாதங்கள் தினமும் தர வேண்டும். குடல் புழுக்களை நீக்கத் தேவையான மாத்திரையை 2 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தர வேண்டும்.
குழந்தைகளுக்கு ரத்த சோகை இருந்தால், மூளையின் செயல்பாட்டை பாதிக்கும்; கவனக்குறைவு வரும். தீவிர ரத்த சோகையால் இதய செயலிழப்பு ஏற்படும்.