தொற்றாக வெளிப்படும் மரபணு கோளாறு
பல குழந்தைகள் அடிக்கடி காய்ச்சல், சளி, தொண்டை வலி போன்ற பிரச்னைகளால் பாதிக்கப்படுவர்.
அவ்வப்போது சாதாரண தொற்று தானே என நினைப்போம். ஆனால், இது பல நேரங்களில், (Primary Immunodeficiency Disorders) PIDs என்ற மரபணு தொடர்பான நோயாக இருக்கலாம்.
இந்நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சாதாரண தொற்றும் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை தர வேண்டிய அளவிற்கு தீவிர பாதிப்பை ஏற்படுத்தும்.
இதன் காரணமாக, உடல் நல குறைபாடுகள், வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படலாம். உறவினர்களுக்குள் திருமணம் நடக்கும்போது இந்நோய் பரவ அதிக வாய்ப்புள்ளது.
அத்துடன், 1 வயதிற்குள் மரணிக்கும் குழந்தைகளில், PIDs ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம். எனவே, மரபணு பரிசோதனை செய்வது மிகவும் அவசியம்.
இது, குழந்தைகளை மட்டுமின்றி பெரியவர்களையும் பாதிக்கும். பலருக்கு 25 வயதிற்கு மேல் தான் நோய் இருப்பதே தெரிய வரும்.
அடிக்கடி சளி, காய்ச்சல், தொண்டை வலி, மூச்சு பிரச்னை, நீண்ட கால நுரையீரல் தொற்றுகள், வளர்ச்சி குறைபாடு, உடல் எடை குறைவு உள்ளிட்டவை ஏற்படலாம்.
தோல் புண்கள், குணமடையாத காயங்கள், நெஞ்சு வலி, ஆகியவையும் அறிகுறிகளாகும்.
இந்த அறிகுறிகள் நீண்ட காலமாக இருந்தால், மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம். மரபணு மற்றும் நோய் எதிர்ப்பு பரிசோதனைகள் மூலம் இதை முன்கூட்டியே கண்டறியலாம்.
குழந்தைக்கு PIDs உறுதியானால், உடன் பிறந்தவர்கள் உட்பட வீட்டில் அனைவரும் பரிசோதனை செய்வது அவசியம். முறையான மருத்துவ சிகிச்சையால் ஆரோக்கியமாக வாழலாம்.