கல்லீரல் கேன்சருக்கு பக்க விளைவுகள் அதிகம் இல்லாத கீமோ தெரபி, டிரான்ஸ்-ஆர்டரியல்!

கல்லீரல் கேன்சர் பாதிப்பின் ஆரம்ப நிலையில் எந்த அறிகுறியும் தெரியாது என்பதால், 70 - 80 சதவீதம் பேர் நோய் முற்றிய நிலையிலேயே பலர் சிகிச்சைக்கு வருவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

கல்லீரல் கேன்சரில் பல்வேறு வகைகள் உள்ளன, அவற்றில் 'ஹெபடோசெல்லுலர் கார்சினோமா' மிகவும் பொதுவானது.

கல்லீரல் கேன்சரை ஆரம்ப நிலையில் கண்டறிய ஒரே வழி, அல்ட்ராசவுண்ட் ஸ்கேன், சி.டி., ஸ்கேன், எம்ஆர்ஐ ஸ்கேன், ரத்த பரிசோதனைகள் செய்வது தான்.

ஆரம்ப நிலையில் கண்டறிந்தால், அறுவை சிகிச்சை மூலம் கேன்சர் கட்டியை அகற்றலாம். முடியாத நிலையில்,கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை முழுமையாக தீர்வைத் தரும் என கூறப்படுகிறது.

அறுவை சிகிச்சை செய்ய முடியாத நிலையில், ரேடியோ அதிர்வெண் நீக்கம், நுண்ணலை நீக்கம், கிரையோதெரபி மூலம் கேன்சர் கட்டிகளை நீக்கலாம்.

கீமோதெரபி மருந்தை நேரடியாக ரத்த நாளத்தில் செலுத்தி, கேன்சர் கட்டியில் கதிர்வீச்சு, டிரான்ஸ்-ஆர்டரியல் ரேடியோ எம்போலைசேஷன் செலுத்துவது போன்ற புதிய முறைகள் தற்போது நடைமுறையில் உள்ளன.

டிரான்ஸ்-ஆர்டரியல் ரேடியோ எம்போலைசேஷன் நடைமுறையில், அமெரிக்கா, ஆஸ்திரேலியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் யட்ரியம் எனும் மருந்து கட்டிக்குள் செலுத்தப்படுகிறது.

இதிலிருந்து வெளிப்படும் பீட்டா கதிர்கள், கட்டியை மெதுவாக அழிக்கும். இத்துடன், குறைவான பக்க விளைவுகளுடன் கேன்சர் செல்களை அழிக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.