உங்களுக்கு 40 பிளஸா? அப்போ இந்த ஊட்டச்சத்துகள் மிகவும் அவசியம் !
குறிப்பிட்ட வயதை கடந்தால் தன்னிச்சையாகவே உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், மூட்டு வலி உட்பட பல்வேறு பிரச்னைகள் எட்டிப்பார்க்க துவங்கும்.
எனவே, 40 வயதை கடந்தவர்கள் கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டிய ஊட்டச்சத்துகள் குறித்து பார்க்கலாம்...
வைட்டமின் பி12 உடலில் சீரான ரத்த ஓட்டம் மற்றும் மூளை செயல்பாடுகளை பராமரிக்க தேவைப்படுகிறது. இது, கோழி இறைச்சி, பால், மீன், முட்டை உட்பட பல்வேறு உணவுகளில் உள்ளது.
தினமும் மக்னீசியம் நிறைந்த உணவுகளை உட்கொண்டால், உயர் அழுத்தம், இதய நோய் பாதிப்பை குறைக்கலாம். பீன்ஸ், சோயா, உலர் விதைகள், வேர்க்கடலை, முட்டைக்கோஸ் போன்றவற்றில் இது நிறைந்துள்ளது.
புரோபயாடிக் உணவுகள் எடையைக் குறைக்கவும், இதய நோய், நீரிழிவு, பக்கவாதம் ஆகியவற்றின் பாதிப்பை தவிர்க்கவும் உதவுகிறது; குடலை ஆரோக்கியமாக வைக்கும். பால் பொருட்களில் இது அதிகமுள்ளது.
இதய நோய், நீரிழிவு பாதிப்பு மற்றும் புற்றுநோய் போன்றவற்றை தவிர்க்க வைட்டமின் டி அவசியம் என ஆய்வுகள் கூறுகின்றன. இதை இயற்கையாக பெற தினமும் அரை மணி நேரமாவது சூரிய ஒளியில் நிற்கலாம்.
கால்வலி, மூட்டு வலி, எலும்பு முறிவுகளை குறைக்க கால்சியம் உதவுகிறது. மத்தி மீன், பால், ப்ரோக்கோலி, டோஃபு போன்ற கால்சியம் நிறைந்த உணவுகளை அதிகளவில் சேர்க்கலாம்.
பீன்ஸ், பருப்புகள், இனிப்பு உருளைக்கிழங்கு, வாழைப்பழம் போன்றவற்றில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. ஆனால், அளவுக்கு அதிகமாக பொட்டாசியம் எடுப்பது இரைப்பை, குடல் மற்றும் இதயத்தை பாதிக்கும்.
ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் ரத்த அழுத்தம் மற்றும் கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது. ஞாபக சக்தியை அதிகரிக்கிறது. ஆளி விதைகள், வால்நட்ஸ், மீன், கீரைகள் போன்றவற்றில் உள்ளது.