அதிக நேரம் இயர்போன் பயன்படுத்துபவரா நீங்க..? அப்போ என்ன பாதிப்புன்னு தெரிஞ்சுக்கோங்க!

இன்றைய நாகரிக உலகில் அவரவர் வசதிக்கேற்ப இயர்போன், ப்ளூடூத் ஹெட்போன், இயர் பட்ஸ் என வாங்கிவிடுகிறோம். ஆனால் பொழுதுபோக்குக்காக பயன்படுத்தும் இயர்போன்களால் ஏற்படும் பாதிப்பை யாருமே உணர்வதில்லை.

சாதாரணமாக காதில் 65 டெசிபல் வரை மட்டும் ஒலியை கேட்க வேண்டும். ஆனால் இயர்போன்களில் 100 டெசிபல் வரை ஒலித்திறன் உள்ளது.

90 டெசிபலுக்கு அதிகமான சத்தத்தை தொடர்ந்து கேட்கும்போது காது நரம்புகளில் தாக்கத்தை ஏற்படுத்தி அந்த நரம்பு செல்கள் உணரும் திறனை இழக்கும். நிரந்தரமாகக் காதுகேளாமல் போக வாய்ப்புகள் அதிகம்.

தொடர்ந்து காதில் மாட்டிகொண்டே இருந்தால், காதின் உணர்வுத்தன்மை குறைந்து மறத்துப்போகும். தற்காலிகமாக அல்லது நிரந்தரமாகவோ காது கேட்கும் தன்மையை இழக்க நேரிடும்.

ஹெட்போன்கள் மின் காந்த அலைகளை உருவாக்குகிறது. தொடர்ச்சியாக நீண்டநேரம் பயன்படுத்தும் போது மின் காந்த அலைகளால் மூளை நரம்புகள் பாதிக்கப்படுகிறது.

நீண்ட நேரம் ஹெட்ஃபோன் பயன்படுத்தினால் மன அழுத்தம் மற்றும் பதற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

எனவே, 60 டெசிபல்களுக்கு குறைவாகக் கேட்டால் காது பாதிப்பு அடையாமல் பாதுகாக்கலாம். ஒரு நாளைக்கு ஒரு மணி நேரத்துக்கும் குறைவாக இயர்போன் பயன்படுத்துவது பாதுகாப்பானது.

ஹெட்போனோ.. இயர்போனோ... இடைவெளி விட்டுக் கேட்டால் நல்லது. அரை மணி நேரத்துக்கு ஒருமுறை 5 நிமிடமாவது இடைவெளி தர வேண்டும்.

இயர்போனை மற்றவர்களுடன் கட்டாயமாக பகிராதீர்கள். காதில் தொற்று ஏற்படாமல் இருக்க தினமும் இயர்போனை சுத்தம் செய்ய வேண்டும். சுத்தம் இல்லாத இடங்களில் இயர்போன் உள்ளிட்ட சாதனங்களை வைக்கக்கூடாது.

கம்ப்யூட்டர், லேப்டாப்களில் உள்ள ஸ்பீக்கர்களை பயன்படுத்தலாம். இயர்போன்களுக்கு பதிலாக ஹெட்போன்களை பயன்படுத்தும் போது பாதிப்பின் தன்மை குறைவாக உள்ளது.