இன்று உலக புகைப்பட தினம்!

புகைப்படம் என்றாலே ஸ்பெஷல் தான். அதை எடுப்பது ஒரு 'கலை'. ஒரு காட்சியை நிலை நிறுத்தி காலம் கடந்தும், நம் நினைவுகளை அசைப்போட உதவும்.

இயற்கை காட்சிகள், வரலாற்று நிகழ்வுகள், சமூக பிரச்னைகள், சுப, துக்க நிகழ்ச்சிகள், மாநாடு, பொதுக்கூட்டம் என வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வுகளையும் நம் கண் முன் கொண்டு வருவது புகைப்படம்.

புகைப்படங்களின் சிறப்பையும், புகைப்படக்காரர்களின் திறமையும் கொண்டாடும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஆக., 19ல் உலகம் முழுவதும், உலக புகைப்பட நாள் கொண்டாடப் படுகிறது.

கடந்த 19ம் நுாற்றாண்டின் துவக்கத்தில், லுாயிசு டாகுவேரே என்பவர், டாகுரியோடை எனப்படும் புகைப்படத்தின் செயல்பாட்டு முறையை வடிவமைத்தார்.

1839 ஜன., 9ல் 'பிரான்ஸ் அகாடமி ஆப் சயின்ஸ்' இம்முறைக்கு ஒப்புதல் அளித்தது. ஆக., 19ல் பிரான்ஸ் நாட்டு அரசு, டாகுரியோடை செயல்பாடுகளை, 'ப்ரீ டூ தி வேர்ல்டு' என, உலகம் முழுவதும் அறிவித்தது

இதை எடுத்துரைக்கும் வகையில், அந்த நாள், உலக புகைப்பட தினமாக கொண்டாடப்படுகிறது.

புகைப்படங்களுக்கு ஆண்டுதோறும் பல்வேறு அமைப்புகளால் விருதுகள் வழங்கப்படுகின்றன. பத்திரிகை துறையில் சிறந்த புகைப்படங்களுக்கு, 'வேர்ல்டு பிரஸ் போட்டோ', 'டைம்' இதழ் மற்றும் 'புலிட்சர் விருது'கள் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.