ஹேப்பி பர்த் டே சென்னை : இன்று சென்னை நகரம் உருவாக்கப்பட்ட தினம்(1639)

தமிழகத்தின் தலைநகராக திகழும் சென்னை உருவாக்கப்பட்ட ஆகஸ்ட் 22ம் தேதி, ஆண்டுதோறும் சென்னை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை நகருக்கு இன்று 385வது பிறந்த தினம்.

இங்கு செயின்ட் ஜார்ஜ் கோட்டையை கட்டுவதற்காக , 1639ம் ஆண்டு ஆகஸ்ட் 22ம் தேதி, கிழக்கிந்திய கம்பெனியைச் சேர்ந்த பிரான்சிஸ்டே, ஆண்ட்ரு கோகன் ஆகியோர் அய்யப்பன் மற்றும் வேங்கடப்பன் என்ற சகோதர்களிடம் இருந்து நிலம் வாங்கினர்.

தங்களுக்கு நிலம் அளித்த சகோதரர்களின் தந்தையான சென்னப்ப நாயக்கர் என்பவரின் நினைவாக, செயிண்ட் ஜார்ஜ் கோர்ட்டையை சுற்றிய பகுதிக்கு சென்னப்பட்டினம் என பெயரிட்டு அழைக்கப்பட்டது.

சென்னப்பட்டணத்தை ஒட்டி இருந்த திருவல்லிக்கேணி, புரசைவாக்கம், எழும்பூர், சேத்துப்பட்டு ஆகிய கிராமங்கள் இத்துடன் இணைந்தன. பின்னர் நகரத்தோடு மயிலாப்பூர், திருவொற்றியூர் ஆகிய பகுதிகள் இணைந்தது.

1688 ஆம் ஆண்டில், சென்னை, முதல் நகர அவையாக இரண்டாம் ஜேம்ஸ் மன்னரால் அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் இந்தியாவின் முதல் நகராட்சி என்ற பெருமையைப் பெற்றது சென்னை.

1947-ல் ஆங்கிலேயர் ஆட்சி முடிவுக்கு வந்த பிறகு, மாநிலமும் நகரமும் மெட்ராஸ் என்று குறிப்பிடப்பட்டன.

பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு, மெட்ராஸ் மாகாணம் 1969ஆம் ஆண்டு 'தமிழ்நாடு' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

இதன் தலைநகரான மெட்ராஸ், 1996ஆம் ஆண்டு 'சென்னை' என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 2004ம் ஆண்டு முதல் சென்னை நகரம் உருவாக்கப்பட்ட வரலாற்றை நினைவூட்டும் வகையில் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.