கேரளா, ஆந்திராவில் பறவை காய்ச்சல்... ஷவர்மா சாப்பிடுவோர் உஷாரா இருங்க!

கேரளா, ஆந்திராவில் பறவைக் காய்ச்சல் அதிகரித்து வரும் நிலையில், எல்லையோர மாவட்டங்களில் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுவரை தமிழகத்தில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு இல்லை என, மக்கள் நல்வாழ்வு துறை தெரிவித்துள்ளது.

அதேவேளையில், சிக்கன் ஷவர்மாவால் பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதால் எச்சரிக்கையுடன் இருக்கும்படி, உணவகங்களை அறிவுறுத்தியுள்ளது.

கோடைக் காலத்தில் திடீரென பெய்த மழையால், தட்பவெப்ப மாற்றத்தால் ஷவர்மா உணவில், 'ஷிகெல்லா, சால்மோனெல்லா' பாக்டீரியாக்கள் உருவாகும் வாய்ப்பு அதிகமுள்ளது.

இந்த வகை பாக்டீரியாக்கள் இருக்கும் சிக்கன் ஷவர்மா சாப்பிட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். எனவே, சிக்கன் ஷவர்மா செய்வதற்கான வழிகாட்டுதல்களை முறையாக அனைத்து உணவகங்களும் பின்பற்ற வேண்டும்.

இறைச்சியின் அனைத்து பகுதிகளையும், முறையாக வேக வைத்திருக்க வேண்டும்.

அதேபோல, அவ்வப்போது புதிதாக தான், மயோனைஸ் தயாரிக்க வேண்டும். தயாரித்து பல மணி நேரம் ஆன மயோனைஸ் பயன்படுத்தக்கூடாது என உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இறைச்சியை முறையாக பதப்படுத்த வேண்டும். எந்த வகை உணவாக இருந்தாலும் முழுமையாக இறைச்சியை வேக வைக்க வேண்டும் எனவும் உணவகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.