கண்கட்டி வருவதற்கான காரணமும், தவிர்க்க வேண்டியவையும்!
இமைகளின் ஓரத்தில் பாக்டீரியா தொற்று மற்றும் அழுக்குகள் சேர்வதால், கண் ஓரத்தில் உள்ள எண்ணெய் சுரப்பிகளில் அடைப்பு ஏற்பட்டு கண் கட்டி உருவாகிறது.
இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பாதிக்கும் தொற்றாகும்.
கண்களிலிருந்து அதிகம் நீர் வடிதல், கண்கள் சிவந்து போதல்,இமைகளின் ஓரத்தில் பரு போன்று கட்டி உருவாகுதல், கண்களில் அதிகளவு வலி, இமைப்பதற்குச் சிரமம் போன்றவை அறிகுறிகளாகும்.
கண்களைச் சரியாகப் பராமரிக்காமல் விட்டுவிட்டால், அழுக்கு, தூசி போன்றவை படிந்து தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது.அதிகளவில் மேக்கப் மற்றும் ரசாயனப் பொருட்களைக் கண்களுக்குப் பயன்படுத்துவதால் வரலாம்.
கண்களைத் தொட நேரிட்டாலும், சுத்தமில்லாத கைகளைக் கொண்டு தொடுவதால் தொற்றின் வேகம் அதிகமாகும் என்பதால் அதை தவிர்க்கவும்.
ஆரம்பக் கால தொற்றுக்கு 10 முதல் 15 நிமிடங்கள் மிதமான வெப்பம் மூலம் கட்டி உள்ள இடத்தில், ஒத்தடம் கொடுப்பதன் மூலம் தற்காலிகமாகத் தீர்வளிக்கும்.
இது ஒரு தொற்று நோய் என்பதால், அடிக்கடி வரும் பட்சத்தில் மருத்துவரை அணுகி முறையான சிகிச்சை அளிப்பதன் மூலம் நிரந்தரமாகக் குணப்படுத்தலாம்.