பரவுகிறது பறவை காய்ச்சல்: இறந்து கிடக்கும் பறவைகளை வெறும் கையால் தொடாதீர்!
வண்டலுார் பூங்காவில் உள்ள பறவைகளுக்கு பறவை காய்ச்சல் உறுதி செய்யப்பட்டதால், பூங்கா இரண்டு நாட்கள் மூடப்பட்டது.
இந்நிலையில், மாநிலம் முழுதும் பறவை காய்ச்சல் பாதிப்பு இருக்கிறதா என்பதை, கால்நடைத் துறையுடன் இணைந்து ஆய்வு செய்ய, மக்கள் நல்வாழ்வு துறை உத்தரவிட்டுள்ளது.
இந்தாண்டு பிப்ரவரியில், சென்னையில் பறவை காய்ச்சல் கண்டறியப்பட்டது. அத்துடன், கடலுார், திருவண்ணாமலை உள்ளிட்ட, 14 மாவட்டங்களிலும், பறவை காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
பின், கால்நடைத் துறையுடன் இணைந்து, காய்ச்சல் பரவல் கட்டுப்படுத்தப்பட்டது. அப்போது, மனிதர்களுக்கு பெரியளவில் பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்படவில்லை.
தற்போது, டெங்கு, ப்ளூ உள்ளிட்ட காய்ச்சல்கள் பரவி வருகின்றன.
இச்சூழலில், எளிதாக மனிதர்களுக்கு பறவை காய்ச்சல் பாதிப்பும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
எனவே, நோய் வாய்ப்பட்டு இருக்கும் பறவைகள், இறந்த பறவைகள் ஆகியவற்றை வெறும் கையில் எடுத்து, அகற்றக் கூடாது.
சென்னை போன்ற நகரப் பகுதிகளில் வீட்டு மொட்டை மாடியில், காகம், புறா உள்ளிட்ட பறவைகள் அவ்வப்போது இறந்து கிடக்கும்.
அவற்றை பிளாஸ்டிக் அல்லது துணி பயன்படுத்தி, பாதுகாப்பாக அகற்ற வேண்டும். அத்துடன், கையை நன்றாக சோப்பு போட்டு கழுவ வேண்டும்.
கோழி இறைச்சியை நன்கு வேக வைத்து சாப்பிட வேண்டும். இதில் அலட்சியம் காட்ட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.