காகங்கள் இறப்புக்கு பறவை காய்ச்சலே காரணம்! உயிரிழந்த பறவைகளை வெறும் கைகளால் தொடக்கூடாது என அறிவுறுத்தல்

சென்னை அடையாறு, இந்திரா நகர் பூங்கா மற்றும் அதை சுற்றியுள்ள தெருக்களில், கடந்த மாதம் 5ம் தேதி முதல், காகங்கள் அடுத்தடுத்து இறந்து கீழே விழுந்தன.

முதல் மூன்று நாட்களிலேயே, 18 காகங்கள் உயிரிழந்தன. அடையாறில் மட்டும் நடந்த நிகழ்வு என்பதால், விஷத்தன்மை காரணமாக இறந்து இருக்கலாம் என, சந்தேகிக்கப்பட்டது.

காகங்கள் உயிரிழப்புக்கான காரணத்தை கண்டறிய, மத்திய பிரதேச மாநிலம், போபாலில் உள்ள மத்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்திற்கு, காகங்களின் மாதிரி அனுப்பி வைக்கப்பட்டது.

மாதிரிகளை பரிசோதனை செய்ததில், 'ஹெச் 5.என்1 ஏவியன் இன்ப்ளூயன்ஸா' என்ற பறவை காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

பீஹாரில், பறவை காய்ச்சலால் காகங்கள் உயிரிழந்து வரும் நிலையில், சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில், காகங்கள் இறந்து வருவது, மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

பறவைகள் இறந்தால், முறையாக அப்புறப்படுத்த, ஆழமாக தோண்டி புதைக்க வேண்டும். உயிரிழந்த பறவைகளை வெறும் கைகளால் தொடக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திடீரென உயிரிழக்கும் பறவைகள் குறித்து, உடனடியாக விலங்குகள் பராமரிப்பு துறைக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பறவைகளிடம் இருந்து, மனிதர்களுக்கு தொற்று பரவ வாய்ப்புள்ளது.

அதன் கழிவுகளில் இருந்து, மனிதர்களுக்கு எளிதில் பாதிப்பு பரவும். காய்ச்சல், தலை வலி, தசைப்பிடிப்பு, இருமல், மூச்சுத்திணறல் போன்றவை, பறவை காய்ச்சலுக்கான அறிகுறிகள்.

தனிநபர் சுகாதாரம் பேணுதல், கை கழுவுதல், முகக்கவசம் அணிதல் ஆகியவை, பறவை காய்ச்சல் பரவலை தடுக்கும். அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவமனையை அணுக வேண்டும்.

கோழிகள், பறவை காய்ச்சலால் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே, கோழி இறைச்சியை சாப்பிடும் போது, நன்கு வேக வைத்து உண்பது பாதுகாப்பானது.