உடல் உறுப்புகள் பாதிக்கப்படும்... தண்ணீர் குடிக்க மறக்காதீங்க முதியோரே!
வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், உடல் சோர்வு என்பது அனைத்து தரப்பினரிடமும் காணப்படுகிறது. குறிப்பாக, நீர்ச்சத்து குறைவு பல்வேறு பாதிப்புகளுக்கு வழிவகுக்கும்.
குறிப்பாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, உடலில் நீர்ச்சத்து குறைபாடு இயல்பாகவே இருக்கும்; கவனமாக இருக்க வேண்டியது அவசியம் என டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
பொதுவாக தசையில் தான் நீர்ச்சத்து அதிகளவில் இருக்கும். வயது அதிகரிக்கும்போது தசை குறைவதால் தண்ணீர் குடிக்க வேண்டும்.
மேலும் நடமாட்டம் குறைந்து விடுவதால், உடலில் இருந்து வியர்வை வெளியாவதில்லை. இதனால் தாகம் எடுப்பதில்லை என்பதால், அவர்கள் தண்ணீர் குடிப்பதில்லை.
கோடையில் தண்ணீர் பருகும் அளவு குறையும் போது, பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படக்கூடும்.
தசை பலவீனம், ஊக்கம் குறைதல், வாய் உலர்வு, தலைவலி, மயக்கம், ரத்த அழுத்தம், இதயத்துடிப்பு அதிகரித்தல், உடல் சோர்வு, குழப்பம் போன்றவை இதன் அறிகுறிகள்.
அருகில் உள்ளவர்கள் அடிக்கடி தண்ணீர் குடிப்பதை நினைவுபடுத்த வேண்டும். நீர்ச்சத்து அதிகமுள்ள பழங்கள், பழச்சாறுகள், கூழ், மோர் போன்றவற்றை அதிகம் உட்கொள்ள வேண்டும்.
தினமும் 3 லிட்டர் தண்ணீராவது பருக வேண்டும். வெயில் அதிகமுள்ள நேரத்தில் வாக்கிங் செல்வதை தவிர்த்து, மாலையில் செல்லலாம். இறுக்கமான ஆடைகளை தவிர்க்க வேண்டும்.