உடலில் ஏற்படும் நோய்க்கு வாயில் அறிகுறி தெரியுமா?
வாயின் ஆரோக்கியம் காப்பது உடலின் ஆரோக்கியத்திற்கு அவசியம். உடலில் வரும் நோய்களில் பலவற்றிற்கு வாயில் அறிகுறிகள் காணப்படும்.
வாயில் உள்ள கிருமிகள் முதலில் பாதிப்பது பற்களையும் ஈறுகளையும் தான். இந்த நோய் கிருமிகள் தான் உடலிலும் பரவும்.
அதே போல உடலில் உள்ள நோய்களில் பலவற்றிற்கு வாயிலும் அதன் தாக்கம் தெரியும். முக்கியமாக சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ஈறுநோய் எளிதில் வரும் வாய்ப்புள்ளது.
குடல் நோய், சுவாசக்கோளாறு, இதய நோய்களுக்கும் வாயின் ஆரோக்கியத்திற்கும் மருத்துவ ரீதியான தொடர்பு உள்ளது.
சிலருக்கு அடிக்கடி வாய் உலர்ந்து போகும். நாக்கு ஒட்டிக் கொள்வது போலிருக்கும். வாயில் எரிச்சலும் இருக்கும். இந்த நிலைக்கு 'சீரோஸ்டோமியா' என்று பெயர்.
உமிழ்நீர் இயற்கையாகவே வாயில் உள்ள கிருமிகளை சுத்தம் செய்யும். அது குறையும் போது சொத்தைப் பற்கள் வரும் வாய்ப்பு 60 முதல் 75 சதவீதம் அதிகமாகிறது.
இதற்கு நோயின் காரணத்திற்கு ஏற்ப சிகிச்சை செய்ய வேண்டும். இந்த அறிகுறி உள்ளவர்கள் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.