டாக்டர் அறிவுரையின்றி பழைய மருந்து சீட்டுகளை தொடர்ந்து பயன்படுத்தலாமா?
டாக்டரால் சில மாதங்களுக்கு முன் பரிந்துரைத்த மருந்து சீட்டுகள் அடிப்படையில், ஒருசிலர் ஆன்ட்டிபயாட்டிக், காய்ச்சல், சளி மருந்துகளை தொடர்ந்து எடுப்பர்.
ஆனால், இப்படி பழைய மருந்து சீட்டுகளை பயன்படுத்தி சிகிச்சை பெறுவது தவறான செயல். ஆபத்தான பல பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.
உடல் நல பிரச்னை முந்தைய நோயிலிருந்து முற்றிலும் மாறுபடலாம். முந்தைய தொற்றுக்கு காரணமான கிருமிகள், தற்போதைய பிரச்னைக்கு காரணமாக இருக்க வாய்ப்பு குறைவு.
ஆன்ட்டிபயாட்டிக், பாக்டீரியா தொற்றுகளுக்கு மட்டுமே வேலை செய்யும். காய்ச்சல், சளி பெரும்பாலும் வைரஸ் தொற்றுகளால் ஏற்படலாம்; ஆன்டிபயாட்டிக் பயனளிக்காது.
காலாவதியான, நீண்ட நாட்களாக வைத்திருந்த மருந்துகள், அவற்றின் வீரியத்தை இழந்து பலனளிக்காமல் சிகிச்சை தோல்வி அடையலாம்.
தேவையற்ற ஆன்டிபயாட்டிக் மருந்துகளை எடுத்துக் கொள்வதால், பாக்டீரியா கிருமிகள் மருந்துக்கான எதிர்ப்பு சக்தியை பெற்று விடும்.
எதிர்காலத்தில் சம்பந்தப்பட்ட கிருமி, தொற்றின்போது மருந்து பலனளிக்காமல் கல்லீரல் பாதிப்பு போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தும்.
நல்ல பாக்டீரியாக்களையும் இவை அழிப்பதால் வயிற்றுப்போக்கு, ஒவ்வாமை, தோல் அரிப்பு, முகம், நாக்கு, தொண்டை வீக்கம், மூச்சுத்திணறல் போன்ற சிரமங்களை ஏற்படுத்தும்.
காலாவதி மருந்துகள் நச்சுக்களாக மாறி, சிறுநீரகத்தை பாதிக்கலாம்.
பாராசிட்டமால் போன்ற மருந்துகள் அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்ளும் போது, கல்லீரல் பாதிப்பு, தலை சுற்றல், வாந்தி, துாக்கமின்மை, உயர் ரத்த அழுத்தம் போன்றவை ஏற்படலாம்.
சளி மருந்துகளில் உள்ள சில பொருட்கள், ஏற்கனவே எடுத்துக் கொண்டிருக்கும் மற்ற மருந்துகளுடன் வினை புரிந்து சிக்கலை ஏற்படுத்தலாம்.