கொழுப்புக் கல்லீரல் ஏற்பட காரணங்களும் தீர்வுகளும்!

உடல் பருமன் உள்ளவர்களுக்கு கொழுப்பு கல்லீரல் நோய் வரும் வாய்ப்பு அதிகம். உடலில் அதிகப்படியான கொழுப்பு சேரும்போது அது கல்லீரல் செல்களில் குவிந்து இந்நோயை ஏற்படுத்தும்.

இதில் இரண்டு வகை. மது அருந்துவதால் ஏற்படுவது ஒரு வகை. இது ஆண்களுக்கு வருகிறது. மது அருந்தாதவர்களுக்கு ஏற்படுவது அடுத்த வகை. இது பெரும்பாலும் பெண்களுக்கு வருகிறது.

இதற்கு அவர்கள் சாப்பிடும் அதீத சர்க்கரையும், கொழுப்பு மிகுந்த உணவு வகைகள் முக்கிய காரணங்கள்.

அதிலும் உடல் உழைப்பும் இல்லாமல் உடற்பயிற்சியும் செய்யாமல் அதிக கொழுப்புள்ள உணவும் சாப்பிடுவது காலப்போக்கில் ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் பிரச்னைக்கு விதை போடும்.

தம் வாழ்நாளில் ஒருமுறை கூட மதுவை தொடாதவருக்கு கொழுப்பு கல்லீரல் வருவது இப்படித்தான். இவர்கள் உடல் எடையை பேண வேண்டும். நீரிழிவை கட்டுப் படுத்த வேண்டும்.

அரிசி உணவு, பேக்கரி பண்டங்கள், சிவப்பு இறைச்சி, துரித உணவு வகைகள், பதப்படுத்தப்பட்ட உணவு, குளிர் பானங்கள், செயற்கை இனிப்பு வகைகளை குறைத்து கொள்ள வேண்டும்.

சிறுதானிய, புரத உணவு வகைகளை அதிகப் படுத்த வேண்டும்.

கொழுப்பு உணவை மொத்தமாக ஒதுக்க வேண்டியதில்லை. இறைச்சிகளை குழம்பாக்கி சாப்பிடலாம். முட்டை சேர்க்கலாம். மீன் நல்லது.

தினமும் ஒரு உடற்பயிற்சி அவசியம். உயரத்திற்கு ஏற்ற உடல் எடையை பராமரிக்க வேண்டும். இவ்வளவும் சரியாக இருந்தால் கொழுப்பு கல்லீரலுக்கு இடமில்லை.