கொலஸ்ட்ரால் பிரச்னை... மட்டன், முட்டை,நெய் சாப்பிட்டால் பாதிப்பு வருமா?

ஹார்மோன்கள், வைட்டமின் டி மற்றும் செரிமான திரவங்களை உருவாக்க உங்கள் உடலுக்கு கொழுப்பு தேவைப்படுகிறது. உடலில் உறுப்புகள் சரியாக செயல்படவும் உதவுகிறது.

பால், வெண்ணை, முட்டை, மட்டன் போன்ற பல உணவுப்பொருட்களில் கொழுப்பு. உள்ளது. இத்தகைய உணவில் உள்ள அத்தனை கொழுப்பையும் நம் உடல் நேரடியாக எடுத்துக் கொள்ளாது.

மூன்றில் இரண்டு மடங்கை உடலில் உள்ள அணுக்களே தன்னிச்சையாக உற்பத்தி செய்கிறது. மீதமுள்ள ஒரு பங்கு மட்டுமே உணவின் மூலம் செல்கிறது.

அதேவேளையில், அதிகளவிலான கொலஸ்ட்ரால் உணவுகளை எடுத்தாலும், பலனில்லை; 500 மி.கி.,க்கு மேல் உள்ள கொலஸ்ட்ராலை குடல் எடுத்துக்கொள்ளாது.

தினமும் இதுபோன்ற உணவுகளை அதிகளவில் எடுத்தாலும், அதற்கேற்ப உடல் உற்பத்தி செய்யக்கூடிய அளவை தன்னிச்சையாக குறைத்துக் கொள்ளும். ரத்தத்தில் அளவு அதிகரிக்கும் போதுதான் பாதிப்புக்கு வாய்ப்புள்ளது.

மாவுச்சத்துள்ள உணவுகளை அதிகமாக எடுக்கும்போது மாரடைப்புக்கு அதிக வாய்ப்புள்ளது. இதனுடன் இனிப்பும் சேரும் போது, புற்றுநோய், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும் என ஆய்வுகள் கூறுகின்றன.

எனவே, முட்டை, பால், தயிர், வெண்ணெய், மட்டன் போன்றவற்றில் உள்ள கொலஸ்ட்ரால் நேரடியாக பாதிப்பு தருவதில்லை.

ஆரோக்கியமாக உள்ளவர்கள் தாராளமாக இவற்றை சாப்பிடலாம். உயர் நீரிழிவு, உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அளவாக சாப்பிடலாம்.

ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அதிகமுள்ளவர்கள் உணவில் நார்ச்சத்தை சேர்க்க வேண்டும். குறிப்பாக, காய்கறிகள், முழு தானியங்கள், பாதாம், பிஸ்தா, போன்ற உலர் கொட்டைகள் போன்றவற்றை சாப்பிடலாம்.

நெத்திலி, மத்தி போன்ற கொழுப்புகள் மிகுந்த கடல் உணவுகளை எடுக்கும் போது இதிலுள்ள அமிலங்கள் உடலுக்கு நன்மை பயக்கும்; கொலஸ்டால் அளவை கட்டுக்குள் வைக்கிறது.

ஆனால், மாவுச்சத்து மிகுந்த மைதா, வெள்ளை சர்க்கரை மற்றும் அதிக இனிப்புப் பொருட்களை தவிர்க்க வேண்டும். டிரான்ஸ் கொழுப்பு வகை உணவுகளையும் தவிர்க்கலாம்.