ஆண்களை தாக்கும் பெருங்குடல் புற்றுநோய்... டாக்டர்களின் அட்வைஸ் என்ன?
மருத்துவ ஆய்வு முடிவுகள், 2022ல், இந்தியாவில், 70 ஆயிரத்து 38 பேருக்கு பெருங்குடல், மலக்குடல் புற்றுநோய் பாதிப்பு இருப்பதாக தெரிவித்துள்ளன.
இதில், 43 ஆயிரத்து 360 பேர் ஆண்கள். இந்தியாவில் ஆண்டுக்கு, 38 ஆயிரத்து 368 பேர் இதனால் உயிரிழப்பது தெரிந்துள்ளது. உலகளவில், இப்பாதிப்பில் இந்தியா 5வது இடத்திலுள்ளது.
நாள்பட்ட மலசிக்கல், ரத்தம் கலந்த மலம், வயிற்றுபோக்கு, இரவில் உறங்கிய பின் மலம் கழிக்க எழுதல் போன்ற அறிகுறிகள் இருந்தால், உடனே மருத்துவரை அணுகுவது அவசியம்.
காரணமின்றி எடை குறைதல், வயிறு வீக்கம், வாந்தி, காரணமின்றி ரத்தசோகை ஏற்படுதல் ஆகியவையும் அறிகுறிகள்.
அதிக உடல் எடை, சர்க்கரை பாதிப்பு, அதிக சிவப்பு இறைச்சி சாப்பிடுவோர், புகைபிடிக்கும் பழக்கம் இருப்பவர்களுக்கு, இப்புற்றுநோய் வர வாய்ப்புகள் அதிகம்.
குடும்பத்தில் யாருக்காவது இப்பாதிப்பு இருந்திருந்தால், மற்றவர்கள் பரிசோதிப்பது அவசியம். 50 வயதுக்கு மேல், ஆண்டுக்கு ஒருமுறை பரிசோதனை செய்ய வேண்டும்.
கொலனோஸ்கோபி மூலம், பெருங்குடல், மலக்குடலின் உட்பகுதி ஸ்கேன் செய்து, ஏதேனும் கட்டிகள் இருக்கிறதா கண்டறியப்படும். பயாப்ஸி எனும் திசு பரிசோதனை செய்யப்படும்.
பிற பகுதிகளுக்கு கட்டி பரவியுள்ளதா என்பதை 'பெட் ஸ்கேன் மூலம் உறுதிபடுத்த வேண்டும். இதன் மூலமே புற்றுநோயின் நிலை தெரியும்.
முதல் இரு நிலைகளில், அதாவது, மலக்குடல், பெருங்குடல் அல்லது வயிறு பகுதியில் மட்டும் புற்றுநோய் பாதிப்பு இருந்தால், அறுவை சிகிச்சை, கீமோதெரபி மூலம் குணப்படுத்தலாம்.
மூன்று, நான்காம் நிலைகளில், உடலின் மற்ற பாகங்களுக்கு பரவியிருந்தால் குணப்படுத்துவது சிரமம். ஆனால், பலரும் தீவிர நிலையில் சிகிச்சைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.
ஆண்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும் பெருங்குடல், மலக்குடல் புற்றுநோயை ஆரம்ப நிலையிலே கண்டறிந்தால் குணப்படுத்தலாம் என்பது டாக்டர்களின் அட்வைஸாகும்.