இந்த சீசனுக்கு சுவையான மாம்பழ ரவா கேசரி
தேவையானப் பொருட்கள் - 2 பழுத்த மாம்பழம், ரவை - அரை கப், சர்க்கரை - முக்கால் கப், நெய் - தேவையானளவு.
முந்திரி பருப்பு, உலர்ந்த திராட்சை - தலா 10, ஏலக்காய் துாள் - 1 டீஸ்பூன், குங்குமப்பூ - 1 சிட்டிகை.
மாம்பழங்களை தோல் நீக்கி, சிறிய துண்டுகளாக நறுக்கி, மிக்ஸியில் போட்டு அரைத்து விழுதாக்கவும்.
அடுப்பில் கடாயை வைத்து மிதமான தணலில் ரவையை போட்டு, மூன்று முதல், ஐந்து நிமிடங்கள் வறுக்கவும். பொன்னிறமாக மாறியதும், ஒரு தட்டில் போட்டு ஆறவிடவும்.
கடாயில் சிறிது நெய் விட்டு உருகியதும் முந்திரி, திராட்சையை சேர்த்து பொன்னிறமாக வதக்கி எடுக்கவும்.
பின் அதே கடாயில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதித்தவுடன், வறுத்த ரவை சேர்த்து தண்ணீர் வற்றும் வரை வேக வைக்கவும்.
பின், மிக்ஸியில் அரைத்த மாம்பழ விழுதை சேர்த்து மூன்று நிமிடம் மிதமான சூட்டில் வேக விடவும். நன்றாக வெந்தவுடன், சர்க்கரை சேர்த்து கலக்கவும்.
ஏலக்காய் துாள், நெய் சேர்த்து, 10 நிமிடங்கள் கெட்டியாகும் வரை வேக விடவும்.
இறுதியாக வறுத்த முந்திரி, திராட்சை, நெய், குங்குமப்பூ சேர்த்து இறக்கினால் சூடான, சுவையான மாம்பழ ரவா கேசரி ரெடி.