டேஸ்டியான பாகற்காய் ஃபிரை... குட்டீஸ்கள் விரும்பிச் சாப்பிடுவர் !

தேவையானப் பொருட்கள் : பாகற்காய் : 1/4 கிலோ, மஞ்சள் தூள் : 1/2 டீஸ்பூன், தனி மிளகாய் தூள் : 1 1/2 டீஸ்பூன், மிளகுத்தூள், கரம் மசாலா தலா 1/4 டீஸ்பூன்,

கடலை மாவு, அரிசி மாவு தலா 2 டீஸ்பூன், இஞ்சி, பூண்டு விழுது : 1/2 டீஸ்பூன், உப்பு, எண்ணெய் : தேவையான அளவு

பாகற்காயை வட்ட வட்டமாக நறுக்கிக் கொள்ளவும். இளம் பாகற்காய் என்றால் விதைகளை நீக்க வேண்டிய அவசியமில்லை.

இதிலுள்ள கசப்புத் தன்மையை நீக்குவதற்காக ஒரு டீஸ்பூன் உப்பு, மஞ்சளை சேர்த்து கலக்கி 15 நிமிடங்களுக்கு ஊற வைத்து, பின்னர், நன்றாகத் தண்ணீரில் கழுவவும்.

பாகற்காயுடன் தனி மிளகாய் தூள், மிளகுத்தூள், கரம் மசாலா, கடலை மாவு, அரிசி மாவு, இஞ்சி, பூண்டு விழுது மற்றும் அரை டீஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.

தண்ணீர் சேர்க்க வேண்டியதில்லை; அவசியமென்றால் சிறிதளவு தெளிக்கவும். இந்த கலவையை நன்றாக பிசறி விட்டு அரை மணி நேரத்துக்கு ஊற வைக்கவும்.

கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் மசாலாவில் ஊறிய பாகற்காய்களை சிறிது சிறிதாகப் போட்டு, பொன்னிறமாக முறுகலாக பொரித்தெடுக்கவும்.

இல்லாவிட்டால், சிறிதளவு எண்ணெயை ஊற்றி அடுப்பை குறைவான தணலில் வைத்து நன்றாக வேக விடும்போது முறுகலாக வரக்கூடும்.