முதியோரை பாதிக்கும் டெலிரியம்... அறிந்தால் தேவையில்லை பயம் !

வயதானவர்கள் மத்தியில் திடீரென ஏற்படும் மனமாற்றம், குழப்பம், வினோதமான நடத்தைகள் பெரும்பாலும் முதுமையின் வெளிப்பாடு என கடந்து விடுகிறோம்.

இது டெலிரியம் எனும் தீவிர மருத்துவ நிலையாக கூட இருக்கலாம். டெலிரியம் என்பது, மூளையின் செயல்பாட்டில் திடீரென ஏற்படும் ஒரு தற்காலிக பாதிப்பாகும்.

இது மனநோய் அல்ல; மாறாக உடலில் ஏற்படும் மற்ற நோய் தொற்று மாற்றங்களின் வெளிப்பாடாகும்.

வீட்டில் உள்ளவர்களிடம் தீவிர குழப்பம், எங்கே இருக்கிறோம், என்ன நேரம், தன்னை சுற்றியுள்ளவர்களை யார் என்று அறியாமல் இருப்பது, கவனமின்மை...

இல்லாத உருவங்களை இருப்பதாக நினைத்து பேசுவது, அதிகம் துாங்குவது அல்லது துாங்காமல் இருப்பது, பேச்சு அதிகமாவது அல்லது பேசாமல் ஒதுங்குவது ஆகியவை முக்கிய அறிகுறிகள்.

சாதாரண நிமோனியா பாதிப்பு, சிறுநீரக தொற்று, ரத்தத்தில் சர்க்கரை மற்றும் சோடியம் அளவுகளில் மாற்றம், சரியான துாக்கமின்மை, மாத்திரைகள் அதிகம் எடுப்பது...

போதைப்பழக்கம், உடலில் நீரிழப்பு, கீழே விழுவது, மலச்சிக்கல், புதிய சூழல் போன்ற பல காரணங்களால் இப்பாதிப்பு ஏற்படுகிறது.

இப்பாதிப்பு முழுமையாக சரிசெய்யக்கூடியவை. கண்டுகொள்ளாமல் விட்டால் டிமென்சியா பாதிப்பு ஏற்படுதல், சில நேரங்களில் இறப்பு வரை கூட இழுத்துவிடும்.

இப்பாதிப்பு உள்ளவர்களை கட்டிப்போடுவது, திட்டுவது கூடாது. மருத்துவ சிகிச்சைக்கு உடனடியாக அழைத்து செல்ல வேண்டும்.