முதியோரின் மனச்சோர்வு... கண்டுக்காமல் விடக்கூடாது!
முதுமை வயதில் மனச்சோர்வு என்பது, முக்கிய பிரச்னை. இதை சாதாரண சோகம் என்று கடந்துவிட முடியாது.
உடல் பலவீனம், பண பற்றாக்குறை, எதிர்பார்ப்புகள், நெருங்கியவர்களின் இறப்புகள் மற்றும் அலட்சியம், உடல் நலக்கோளாறு போன்ற பல காரணங்களால் மனச்சோர்வு ஏற்படுகிறது.
சோர்வு, தனிமை, துாக்கமின்மை, ஆர்வமின்மை, எரிச்சல், நினைவாற்றல் குறைவு போன்றவை மனச்சோர்வுக்கான முக்கிய அறிகுறிகள்.
இதை கவனிக்க தவறினால், உடல் ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்திவிடும். மனச்சோர்வு உள்ளவர்கள் துாக்கமின்மையால் அவதிப்படுவர்; அலட்சியமாகவிட்டால், சிக்கல்கள் அதிகரிக்கும்.
இதற்கு, உடனடியாக மனநல ஆலோசகர் அல்லது மருத்துவர்களை அணுக வேண்டும். மனச்சோர்வு அறிகுறியுள்ள முதியவர்களிடம், அதிக நேரம் செலவிட்டு அவர்களை பேச வைத்து கேட்க வேண்டும்.
அவர்கள் பேசுவது சில நேரங்களில் அர்த்தமில்லாமல் இருந்தாலும், அதை வெளிப்படுத்தாமல் அவர் போக்கில் எடுத்துச் செல்ல வேண்டியது அவசியம்.
இரவில் நன்கு துாங்குகின்றார்களா என்பதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும். துாக்கமின்மை பிரச்னையுள்ள முதியோர் காபி, மதுபானம் பழக்கத்தை குறைக்க வேண்டும்.
குறைந்தது 30 நிமிடம் உடற்பயிற்சி செய்ய வேண்டும். சூரிய ஒளியில் அதிக நேரம் செலவிடுதல், ஒரே நேரத்தில் உறங்க செல்வதையும், எழுவதையும் பழக்கப்படுத்த வேண்டும்.
படுக்கைக்கு முன் மொபைல் மற்றும் டி.வி., பார்ப்பதை தவிர்த்தல், துாக்கத்துக்கேற்ப அறை சூழல் அமைத்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும்.
சரியான துாக்கம் இருந்தும், தொடர்ந்து மனச்சோர்வு அறிகுறிகள் தென்பட்டாலும், அலட்சியப்படுத்தாமல் டாக்டர் அல்லது மனநல ஆலோசகர்களை அணுக வேண்டும்.