வளர்ப்பு நாய் கடித்தாலும் ரேபீஸ் தொற்று பரவ வாய்ப்பு: எச்சரிக்கும் டாக்டர்கள்!
ரேபீஸ் வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட, நாய், ஆடு, மாடு, குதிரை, குரங்கு, பூனை, நரி, கீரி, ஓநாய், வவ்வால் போன்றவை கடித்தாலும், இப்பாதிப்பு ஏற்படலாம்.
இந்தியாவில் பெரும்பாலும், நாய்கள் மூலமாகவே மனிதர்களுக்கு இந்நோய் தொற்றுகிறது.
வெறிநாய் கடித்த நபருக்கு கடும் மனகுழப்பம் ஏற்படும். என்ன செய்கின்றோம் என தெரியாமல், அங்குமிங்கும் அலைவர்.
வாயில் உமிழ்நீர் வடியும். வெளிச்சம், சத்தம் என்றால் உடலில் நடுக்கம் ஏற்படும். தண்ணீரை பார்த்தால் மூச்சிரைப்பு ஏற்படும்.
அதனால் வளர்ப்பு நாயாக இருந்தாலும் கடித்தால், தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். நாய் கடியின் தன்மை பொறுத்து சிகிச்சை முறைகளும் மாறுபடும்.
நாய் வளர்ப்பவர்கள் உரிய தடுப்பூசிகளை நாய்களுக்கு சரியான நேரத்தில் செலுத்த வேண்டும்.
நாய் கடித்தவுடன், தண்ணீர் குழாயை நன்கு திறந்து விட்டு, அதில் காயத்தை காண்பித்து, 15 நிமிடம் சோப்பு போட்டு நன்கு கழுவ வேண்டும்.
காயத்தை மூடாமல், மருத்துவமனைக்கு சென்று தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.